வளம் தருவார் வடுவூர் ராமர்

பாலகன் ராமன், அயோத்தி மக்களின் அன்பு அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவன். அடுத்த அவதாரத்தில் கிருஷ்ணனாக உருவெடுக்கப் போகும் அவனை அப்போது கொஞ்சும் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அந்த மக்கள் ஏங்கினார்களோ என்று அதிசயிக்கத்தக்க அளவுக்கு பாலகன் ராமன் மீது யாவரும் ஒன்றுபோல் அன்பு பாராட்டினார்கள். ராமனும் அந்த பால்ய பருவத்தில் ஏற்றத் தாழ்வுகள் பாராமல் அனைவரிடமும் பழகினான்.

அரச சம்பிரதாயப்படி வில் வித்தை, வாள் வீச்சு, மற்போர் போன்றவற்றைப் பயின்றான் என்றாலும், அந்தப் பயிற்சியெல்லாம் வன்முறை சார்ந்தது என்பதையும், தவிர்க்கவே முடியாத கட்டத்தில்தான் அவற்றைப் பிரயோகிக்க வேண்டும் என்பதையும் அவன் பரிபூரணமாக உணர்ந்திருந்தான். அதனாலேயே அந்தப் பயிற்சிகளின்போது இறுகும் அவனது கரங்கள், பிறருடன் பழகும்போது மென்மையாகிவிடும். இதற்கு முக்கிய காரணம் அவன் மனம் அத்தனை மென்மையானது, அவனது இளந்தளிர் சருமம்போல!

பாலகனாக நகர் உலா வரும் காலங்களில், அவன் நாட்டின் பலவகை முகங்களைப் படித்திருக்கிறான். மாறுபட்ட குணாதிசயம் கொண்ட மக்கள், அவர்களுடைய தொழில்கள், அவர்களுடைய நம்பிக்கை, வாழ்க்கை முறை என்று எல்லாவற்றையும் அவனால் கவனிக்க முடிந்தது. அந்த வகையில்தான் ஒரு கொல்லன் பட்டறையில் வளைந்திருந்த இரும்புக் கோல் ஒன்றைத் தணலாக்கி, சம்மட்டியால் அடித்து அதை நிமிர்த்தியதை அவன் பார்க்க நேர்ந்தது.

குழந்தையாக அவன் சிந்தித்ததன் பலன்தான், உண்டிவில்லால் கூனியின் முதுகை நிமிர்த்த அவன் மேற்கொண்ட முயற்சி. வெளிப்பார்வைக்கு அவன் அந்த மூதாட்டியை இம்சைபடுத்தியதாகத் தோன்றினாலும், அவன் மனதுக்குள் அவள் நலம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கமே நிறைந்திருந்தது. அந்த பாலக தோற்றத்தை இந்த யுகத்து பக்தர்கள் கண்ணாற கண்டு ஆனந்தப்படவேண்டும் என்பதற்காகவே, வடுவூரில் ராமன் அழகுக் குழந்தை உருவத்தில் அற்புத தரிசனம் தருகிறான். இத்தலம் தஞ்சைக்கு அருகே அமைந்துள்ளது.

-  மீனாட்சி

குடும்ப சகிதமாக திருவல்லிக்கேணியில் ராமன்

சென்னையின் புகழுக்கு ஒரு காரணமாக விளங்குகிறது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில். ஆமாம், 108 திவ்ய தேசங்களில் இக்கோயிலும் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற அற்புதத் தலம். இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார் ராமன். யாரையும் விலக்காத, அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் பண்பு கொண்டவன் ராமன். தன் சிற்றன்னை சுமித்திரையின் மகனான லட்சுமணனை எப்போதும் தன்னுடனேயே இருத்திக்கொண்டான். கைகேயியின் மகனான பரதன், தனக்கு மாற்றாக அயோத்தியை ஆளப்போகிறான் என்று அறிவிக்கப்பட்டபோதும் அவன் மீது எந்த துவேஷமும் கொள்ளாமல் அவனுக்காக நாட்டையே விட்டுக்கொடுக்க முன்வந்தான். சுமித்திரையின் இன்னொரு மகனான சத்ருக்னன், பரதனோடு இணைந்திருந்தாலும், தனக்கும் அவன் தம்பிதான் என்று அவனையும் விட்டுக் கொடுக்காத பேரருளாளன் அவன். அதனால்தான் இந்த திருவல்லிக்கேணி திருத்தலத்தில் அவன் பரதன், சத்ருக்னனுடன் சேர்ந்து தரிசனம் தருகிறான்.

- அன்னவயல்

Related Stories: