உலகெங்கும் பரவிய காளி வழிபாடு

இடாகினி - ஜப்பானிய டாகினி தென்-5

காளி கோட்பாடு பெண்ணை ஆணுக்கு அடங்காதவளாக ஆணை அடக்கி ஆளும் போர்க்குணம் படைத்தவளாக காட்டுகிறது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில்  காளி கேலே,  காலே என்று பல பெயர்களில்  வழிபடப்பட்டாள். இந்தியாவில் கங்கை  யமுனைச்  சமவெளிப்பகுதிகள் தவிர  மற்ற பகுதிகளில் இமாசலப்  பிரதேசம், பஞ்சாப், அஸ்ஸாம், வங்காளம் மற்றும் தென்னிந்தியா முழுக்க காளி வழிபாடு காணப்படுகிறது. இவள் இனக்குழுவின் தலைமை தாங்கி போர் நடத்திய  போர்த்தெய்வமாக இருந்தாள். இதனால் அரசர்கள் போரில் வெற்றி வேண்டி இவளை கொற்றவை என்றும் துர்க்கை என்றும் வணங்கி வந்தனர்.

காளி மண்டையோடுகளை கழுத்தில் மாலையாக கோர்த்து அணிந்திருந்தாள். ஒரு கையில் வெட்டிய தலையின்  உச்சி மயிரைப் பிடித்திருந்தாள். அதில்  இருந்து  ஒழுகும் ரத்தத்தை மறு கையில் உள்ள ஓட்டில் பிடித்தபடி இருந்தாள். ஒரு கையில் கத்தியும்  ஒரு கையில் சூலமும் கொண்டு கொடூரமாக காட்சி அளித்தாள்.  இடுப்பில் வெட்டுண்ட கரங்களை ஆடையாக்கி உடுத்தியிருந்தாள். சில இடங்களில் ஆணின் அடையாளமான சிவனின் நெஞ்சின் மீது கால் வைத்து மிதித்தபடி   நாக்கைத்  தொங்கவிட்டு சிங்கப் பற்களுடன் கோரமாகக் காட்சி அளிப்பாள். தாந்திரிகத்தில்  காளி சிவனின் மீது சம்போக நிலையில் அமர்ந்து அவனது தலையை  வெட்டி கையில் வைத்திருப்பவளாகவும் சித்திரிக்கப்பட்டாள்.

இந்திய வரலாற்றில் காளி

ஆதிகால மனிதனின் காலத்தில் தாய்த் தெய்வமாகக் கருதப்பட்ட காளி கிபி மூன்றாம் நூற்றாண்டில் வடநாட்டில் குப்தர் காலத்தில் போர்த் தெய்வமாகப்  போற்றப்பட்டாள். போருக்குச் செல்வதற்கு முன்பு காளிக்கு ரத்தப் பலியிட்டனர். அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் காளியை துர்காவாக்கி பார்வதியின்  கோப வடிவமாக மாற்றி அமைத்தனர்.  தேவி மகாத்மியம் இவளை துர்கா  என்று அழைத்தது.  அடுத்து தோன்றிய காதம்பரி, மாலதி மாதவம் ஆகிய நூல்கள்  இவளை ரத்த தாகம் எடுத்த சண்டி என்றும் சாமுண்டி என்றும் அழைத்தன. இவளைப் புராணம் தெய்வம் ஆக்கின.

 

கிபி எட்டாம் நூற்றாண்டில் காளி தாந்திரிக மரபில் இணைக்கப்பட்டு யோகினியாகவும், டாகினியாகவும் பைரவருடன் சம்போகிக்கும் பெண்ணாகவும்  மாற்றப்பட்டாள். அதுவரை காளி தனித்தெய்வமாக இருந்தாள். தாந்திரிகத்துக்குள் கொண்டு வரப்பட்டதும் காளிக்கும் சம்போகம் தவிர்க்க முடியாததாயிற்று. லிங்க  புராணத்தில் இவள் சிவனின் உடலுக்குள் புகுந்து தாருகாசுரனைக் கொன்றதாகவும் கதை  சொல்லப்பட்டது.

 

காளி வழிபாடு இறப்புடனும் பேரழிவுடனும் தொடர்பு படுத்தப்பட்டதனால் அவளுக்கான கோயில்கள் எழுப்புவதில் இந்து சமயத்தில் சில தடைகள் இருந்தன. காளி  கோயிலை ஊருக்குள் கட்டக் கூடாது ஊருக்கு வெளியே சுடுகாட்டுக்கு அருகில் கட்டலாம் என்று விதிகள் செய்தனர். வீட்டில் காளி தெய்வத்தின் படத்தை  வைத்து வழிபடக் கூடாது. பெண்கள் காளியை வழிபடுதல் கூடாது. காளியைப் பெண்கள் வழிபட்டால் அவர்கள், வீட்டுக்கும் கணவனுக்கும் அடங்காதவர்களாகி  விவாகரத்துப் பெற்றுவிடுவர் என்ற கருத்து பரப்பப்பட்டது. காளியை வழிபடும் ஆண்கள் கடும் பிரம்மச்சர்யம் காக்காவிட்டால் கால் கை விளங்காமல் அவதிப்பட  நேரிடும் என்றும் கருத்து நிலவியது. இதனாலும் காளி துஷ்ட தேவதையாகக் கருதப்பட்டாள்.

கிபி பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப் பரணி காளி பற்றி வருணிக்கிறது. தமருகம் ஒலிக்க அதன்  தாளத்துக்கு ஏற்ப சாதகர் என்னும்  உதவியாளர் பேயும் யோகின மாதரும் ஆடிக்கொண்டு வரும்போது  தமது வலக்கையில் படைக்கருவிகளையும் இடக்கையில் அப்போது அறுக்கப்பட்ட புதிய  தலைகளையும்  தூக்கிக் கொண்டு வருகிறார்கள். தாயிடம் குழந்தை பேய்கள் இறைச்சி கேட்டு அழுகின்றன. அவற்றின் பசியமர்த்த தாய்ப் பேய் பிணத்தை  இழுத்துச் சென்று தின்ற நரிகளின் வாயில் இருந்து  பிணத்தின் தசையைப் பிடுங்கி  குழந்தைகளுக்குத் தருகின்றன.

டாகினி

டாகினி அல்லது இடாகினி என்று அழைக்கப்பட்ட தெய்வம் யோக சித்திக்காக, பிணங்களைத்  தோண்டி எடுத்துத் தின்பவள் என்றும் எரியும் சிதையில் இருந்து  பிணத்தின் தசையைப் பிய்த்துத் தின்பாள் என்றும் கூறப்படுபவள். இவளும் காளியின் அம்சம்.  காளியின் மெய்க்காப்பாளர் சாதகர் எனப்பட்டனர். அவர்களுடன்  இடாகினியும் இருப்பதாக தமிழ் இலக்கியங்களில்  சொல்லப்பட்டது.

தமிழ் இலக்கியத்தில் இடாகினி

சிலப்பதிகாரத்தில் மாலதி என்பவள் தனது  கணவனின் இன்னொரு மனைவியின் குழந்தை அழுததைக் கண்டு தூக்கி எடுத்து பால் ஊட்டினாள். அந்தக் குழந்தை  மூச்சுத் திணறி இறந்துவிட்டது. குழந்தையை பெற்றெடுத்தவள் இவளை ஏசினாள்.

‘‘என் பிள்ளையை உயிருடன் கொண்டு வந்து தா’’ என்றாள். மாலதி அக்குழந்தையுடன் சுடுகாட்டுக்கு வந்தாள். அங்கு இடாகினிப் பேய் வந்து அவளிடமிருந்து குழந்தையைப் பறித்துக் கொண்டு போயிற்று. அப்போது பாசண்டச் சாத்தான் எனும் தெய்வம் இடாகினியிடமிருந்து குழந்தையைப்  பறித்து அதற்கு உயிருண்டாக்கிக் கொடுத்தது.

காந்த் திறம் உரைத்த காதையில்  இடாகினிப் பேய்

பாசண்டச் சாத்தற்கு  பாடுகிடந்தா ளுக்கு

‘‘ஏசும்படி ஓர் இளங்கொடியாய்  ஆசிலாய்

செய்தவம் இல்லோருக்குத் தேவர் வரம்கொடார்;

பொய்யுரையே அன்று; பொருள்உரையே கையில்

படுபிணம்  தா’என்று பறித்து அவள்கைக் கொண்டு

சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளில் சென்றாங்கு

இடுபிணந்  தின்னும் இடாகினிப் பேய்வாங்கி

மடியகத்து  இட்டாள் மகவை’’

என்ற அடிகளில் இடாகினி என்பவள் ஒரு பிணம் தின்னிப் பேய் என்பது தெளிவாகிறது.

கலிங்கத்துப் பரணி என்ற சிற்றிலக்கியத்தில் காளியின் உதவியாளரான சாதகர் மற்றும்  இடாகினி பற்றிய  குறிப்புகள்  கிடைக்கின்றன. போருக்குச் சென்ற  கணவன் திரும்பி வராததால் அவனைத் தேடிக்கொண்டு போர்க்களம் வந்த மனைவி இடாகினியிடம் என் கணவனை

பார்த்தாயா என்று கேட்கிறாள்.

‘‘தங்கண வருடன் தாமும் போக வென்றே

சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்

எங்கணவர் கிடந்தஇடம் எங்கே என்றறிந்து

இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்’’

என்ற பாடல் சாதகர் மற்றும் இடாகினி பற்றி குறிப்பிடுகிறது.

இடாகினி பெண்ணா? பெண் பேயா?

டாகினி என்ற யோகினி பவுத்த சமயத்தின் தெய்வம். இவள்  அனைத்து யோக சித்தியும் பெற்றவள் என்பதால் வேண்டும் உருவை எடுக்க முடியும். அவள் பெண்  உருவில் வந்து தோன்றுவாள். அதுவே அவளது இயல்பு. அவளால்  வேறு உருவம் எடுத்துச்  செயல்படவும் வான் வெளியில் பயணிக்கவும் [sky goer]  முடியும், என்று Dakini - Some comments on its Nature and Meaning  என்ற கட்டுரையை எழுதிய ஜென் வில்லியம்ஸ் தெரிவிக்கிறார்.  இடாகினி என்பவள் பெண் தான் என்று ரிச்மான்ட் பல்கலைக்கழகத்தின் சமயத் துறை பேராசிரியர் மிராண்டா ஷா உறுதிபடத் தெரிவிக்கிறார்.

தமிழகத்திற்கு டாகினி என்ற யோகினி அல்லது

பெண் புத்தர் பவுத்தர்கள் மூலமாக சீனாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து ஜப்பானுக்கு வந்தது. தமிழ்ச் சொற்கள் ட, ல, ர போன்ற எழுத்துக்களைக் கொண்டு  தொடங்குவதில்லை என்ற மொழி மரபு பின்பற்றப்படுவதனால்  டாகினியுடன் இகரம் முதலில்   சேர்க்கப்பட்டு இடாகினி என்றாயிற்று. டாகினி என்ற சொல்  எவ்வித மாற்றமும் பெறாமல் டாகினி என்றே ஜப்பானில் வழங்கப்படுகிறது. DAKINI TEN அதாவது டாகினி தெய்வம் என்றே ஜப்பான் மொழியிலும்  இடாகினியை அழைக்கின்றனர்.

ஷிந்தோவும் பவுத்தமும்

ஷிந்தோ சமயம் என்பது ஜப்பானில் பின்பற்றப்பட்டு வந்த பூர்வீகச்   சமயம் ஆகும். பவுத்தம் அங்கே பரப்பப்பட்டபோது அச்சமயம் அரசர்களின்  ஆதரவு பெற்ற  சமயம் என்ற தகுதியைப் பெற்றதனால் ஷிந்தோ சமயத்தின் பெண் தெய்வ வழிபாடு [நரி ராணி வழிபாடு]  புதிய பவுத்த சமயத்தின் யோகசித்தி பெற்ற   டாகினியுடன்  இணைக்கப்பட்டது. ஷிந்தோ சமயத்தின் கோயில்களில் மூன்றில் ஒரு பங்கு  கோயில்கள் டாகினி கோயில்களாயின.

ஆகாச சஞ்சாரியான டாகினி

பவுத்தத்தில் டாகினி மனக் கிலேசத்தை மாற்றி ஞான ஒளியைத் தருவாள்.  எனவே அவள் ஞான  ரூபிணியாக கருதப்பட்டாள். இச்சமயம் அவளை ஆகாச  சஞ்சாரியாகக் கருதியது. ஆகாயத்தில் நடனம் ஆடுபவள் [sky goer/ sky dancer] என்ற பொருளில் KAHANDRO என்ற சொல்லால் திபெத் நாட்டில்  வழங்கி வந்த வஜ்ராயன் பவுத்தம் டாகினியை அழைத்தது.  யோகப் பயிற்சியில் சிறந்து விளங்கி அதில்  உச்ச நிலையை அடைந்த பெண் புத்த நிலையையும்   அடைகிறாள் என்பதை வஜ்ராயன பவுத்த  பிரிவு மட்டுமே ஏற்றுக்கொண்டது. மகாயான பவுத்த பிரிவு இதனை ஏற்றுக் கொள்வதில்லை.

திபெத்தின் வஜ்ராயன பவுத்தம்

திபெத்திய பவுத்தம் சக்ர சம்வாராவும் வஜ்ரா யோகினியும் இணைந்து கருணை மற்றும் பிரக்ஞையை உணர்த்துவதை  ஆண் பெண் இணைப்பாகக் குறியீட்டு  முறையில் உணர்த்தியது.

இதை மற்றவர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆபாசமாக நோக்கினர்.  யோக சித்தி பெற்று புத்த நிலை எய்திய திபெத்திய இளவரசி யோகினியாகப்  போற்றப்பட்டாள் அவள் பத்ம சம்பவாவை மணமுடித்து இடாகினி என்ற தெய்வநிலை எய்தினாள். இவள் இங்கு டாகினியாக வழிபடப்படுகிறாள். இவள் மனம்  [காட்சி], மொழி [மந்திரம்], மெய் [முத்திரை], என்ற மூன்றாலும் யோக சித்தி பெற்றவள். வஜ்ராயன பவுத்தத்தின் ஆதிகாலத்து டாகினியான இவளை நரோடாகினி  என்றும் அழைத்தனர். நரன் என்றால் மனிதன். மனித குலத்தில் இருந்து உதித்த டாகினி [நரோடாகினி] என்று இவள் போற்றப்பட்டாள்.

இடாகினிப் பேய்

சிலப்பதிகாரம் பிணம் தின்னும் பேய் என்று  புகார் காண்டத்தில் கனாத்திறம் உரைத்த காதையில் கூறுகிறது. கலிங்கத்துப் பரணியும் இடாகினியை சுடுகாட்டில்  எரியும் பிணத்தை எடுத்துத்  தின்னும் பேயாகவே வர்ணிக்கின்றது. இடாகினி காளிக்கு ஏவல் செய்பவள் என்று சதுரகராதி [பெயரகராதி] குறிப்பிடுகின்றது.  அவளை மாயவள், பஞ்சலி வளவை, சதுரகராதி [பொருளகராதி] தெரிவிக்கின்றது.

யாம் யுன் தத்துவத்தில் டாகினி

பாகவத புராணம், பிரம்ம புராணம், மார்க்கண்டேய புராணம், கதா சரித சாகரம் போன்ற நூல்கள் இடாகினி பற்றி தெரிவிக்கின்றன.  பௌத்த  சமயம்  இவளை தாந்திரீகத் தெய்வமாகக் குறிப்பிடுகின்றது. இந்து சமயம்  இடாகினியைத்  துஷ்ட ஆவி என்று குறிப்பிட பௌத்த சமயம் இவளைத் தெய்வமாகவும்,   விடுதலைச் சக்தியாகவும்  போற்றுகின்றது. யாம் யுன் என்ற ஆண் - பெண் இணைப்பு தத்துவத்தில் யுன் எனப்படும் பெண் டாகினி ஆவாள். இவள்  அமைதியானவள் ஆக்ரோஷமானவள் அல்ல.

காளியும் டாகினியும்

தாய் தெய்வ வழிபாட்டுக் காலத்தில் ஆக்ரோஷமான பெண் தெய்வமான காளி பைரவரோடு இணைவதாக கருதப்பட்டது. பைரவரும் காளியும் முகமுகமாக  நோக்கியிருக்க காளி பைரவரின் மடியில் அமர்ந்து அவரது இடுப்பை தன்னிரு கைகளால் அணைத்தபடி சம்போகத்தில் இருப்பதாக உருவங்கள் அமைக்கப்பட்டன.  பிற்காலத்தில் இந்நிலை  சம போக நிலையாகவும் உணர்த்தப்பட்டது. ஆண் பெண் ஏற்றத் தாழ்வின்றியும் யோக நிலையின் உச்சம் என்பதும் போதிக்கப்பட்டது.  

காளி பைரவர் இணைப்பு சக்கர  சம்வார வஜ்ரவராகி எனப்பட்டது. பின்னர் காளியின் இடத்தை டாகினி பெற்றாள்.  பவுத்தம் விடைபெற்றுப் போன பிறகு சைவ  சமய எழுச்சி ஏற்பட்ட காலத்தில் இவ்விணைப்பு   சிவசக்தி சம்போகம் என்றும் மாற்றம் பெற்றது. காளி கோயில் இருக்கும் இடங்களில் பைரவரும்  சேர்ந்து  இருப்பதற்கு இதுவே காரணமாகும். ஆனால் பைரவரை காளியின் இணைத் தெய்வமாகப் போற்றாமல் காவல் தெய்வமாகக் கருதி இந்து சமயத்தில்  வழிபடுகின்றனர்.

இந்து பவுத்த டாகினிகளின் வேறுபாடு

ஆண் - பெண் இணைப்பில் இந்து டாகினிக்கும் பவுத்த டாகினிக்கும் இடையில்  வேறுபாடு உண்டு. இந்து சமயத்தில் அவள் சர்வ வல்லமை படைத்த சக்தியாக  விளங்க பவுத்தத்தில்  அவள் அமைதியானவளாக விளங்குகிறாள். பௌத்த சமயத்தில் தாயும் தந்தையுமாக [அறிவும் அன்பும்] இணைந்திருக்கும் அனுத்தார  யோக தாந்திரீகத்தில் ஆண் கருணை மற்றும்  உபாய கவுசல்யத்தின் வடிவமாக விளங்குகிறான். பெண் அறிவு அல்லது பிரக்ஞையின் வடிவாகக்  கருதப்படுகிறாள். இந்து சமயத்தில் பெண் சக்தியின் வடிவமாகவும், ஆண் சவமாக கிடக்கும் சிவனாகவும் மாறுபட்ட கருத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாகினி கடவுட் கோட்பாடு

இந்தியாவில் ஆரம்பத்தில் யோகினியாகவும் பின்னர் அறிவைக் குறிக்கும் இணை வடிவான [ஜோடி] பெண்ணாகவும் அதற்குப் பிறகு [சிவ] சக்தியாகவும்  இறுதியில் சுடுகாட்டில் திரியும் பிணம் தின்னி பேயாகவும் மாற்றம் டாகினி கோட்பாடு பெற்றுள்ளது. ஆனால் ஜப்பானில் டாகினி பெண் தெய்வமாகவே அன்று  முதல் இன்று வரை முக்கியத்துவம் பெற்றுள்ளாள். ஜப்பான் நாட்டில் அரசன் முடிசூட்டுவதற்கு முன்பு டாகினி  வழிபாடு  நடத்தவில்லை என்றால்  அவனது  அரசுக்கு உடனடியாக பேரிழப்பு நேரிடும் என்ற அச்சம் நிலவியது. எனவே ஜப்பான் அரசர்கள் டாகினிக்குப் பூசை போட்ட பிறகு முடிசூட்டினர். நவீன காலத்தில்  டாகினி வழிபாடு அதோகோ கொண்கேன் [ATOGO GONKEN} என்ற மந்திர உச்சாடனத்துடன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  

தர்மபாலர் என்பது பவுத்த சமயத்தில் ஓர் உயர்ந்த தகுதி நிலை ஆகும். மகா காளன் ஓர் தர்மபாலர் ஆவார். இவரை அவலோகதிஸ்வரர் என்று அழைத்தனர். புத்த   நிலை எய்தியவர்களை இப்பெயரால் குறிப்பிடுவது பவுத்த மரபு.

பொதிகை [போதி இல்] மலையில் வாழ்ந்த அவலோகதீஸ்வரரை அங்கு வாழ்ந்த மக்கள் பேச்சு வழக்கில் அகத்தீஸ்வரர் என்று அழைத்தனர். இதுவே அங்கு  அகத்தியர் வந்து தங்கியதாகக் கதைகள் புனையவும் ஸ்தல புராணங்கள் எழுதவும்  சைவ சமய எழுச்சியின்  போது  உதவியது.

விழிப்புணர்ச்சியின் வடிவமான டாகினி

தர்மபாலர்களில் முக்கியமானவர்  பால் தேன் லாமோ [pal den lhamo]என்பவள் ஓர் இடாகினி ஆவாள்.  இவள் வஜ்ராயன சிம்ம முகி  எனப்பட்டாள். புத்த சமயத்தில் பெண்ணின் உயர்ந்த நிலையாக போற்றப்பட்ட டாகினி ஞான ரூபிணி ஆவாள். பவுத்தம் பரவியிருந்த கேரளாவில் டாகினியை பகவதி எனப்  பெயர் மாற்றி அழைத்தனர் [Keith Dowman net.]. இன்று பகவதிக்குக் கோயில் இருக்கும் இடங்களிலெல்லாம் ஆதியில் தாய்த் தெய்வ வழிபாடும்  பின்னர் டாகினி  கோயில்களும் இருந்தன.

டாகினியும் கலச பூஜையும்

வஜ்ராயன பவுத்தத்தில் ஆண் தருபவனாகவும், வெளியேற்றுபவனாகவும் [giver] இருக்க  பெண் பெறுபவளாகவும் ஏற்றுக்கொள்பவளாகவும் [receptor]  கருதப்பட்டாள்.

டாகினி ‘ஓ இனாரி’ ஆன வரலாறு

ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  இருந்து டாகினியை ஜப்பான் நாட்டில் வணங்கத் தொடங்கினர்.   ஹெலான் அரசின் காலம் முடியும் போது  இடாகினியை  யோகினி என்ற நிலையில் இருந்து ஷிந்தோ தெய்வமான நரி ராணியுடன் இணைத்துவிட்டனர்.  இவளுடன் எப்போதும் ஒரு வெள்ளை நிற நரி  இருக்கும் என்று  தெரிவித்தனர். ஜப்பானிய மொழியில்  கித்சுனே என்றால்  நரி.  ஆதியில் ஜப்பானியர் நரிகளுடன் வசித்தனர். எனவே அவர்களின் மண்ணின்  சமயமான ஷிந்தோ சமயத்தில் நரியும் ஒரு பெண் காவல் தெய்வம் ஆயிற்று.

ஓ இனாரி

டாகினியின் தூதுவராக விளங்கும் வெள்ளை நிற நரியை ஓ இனாரி என்ற சொல் குறிக்கின்றது. இந்த நரியை போ ஓ இனாரி என்பர் இது ஆண், பெண் மற்றும்  அலி வடிவிலான தெய்வமாகும். இடாகினியின் அடுத்த கட்ட வளர்ச்சியான    ஓ இனாரியை  மூன்று தெய்வங்களின் சேர்க்கை என்றும் ஐந்து தெய்வங்களின்  சேர்க்கை என்றும் ஜப்பானில்  புகழ்வது உண்டு. இனாரி ஓ காமி என்ற பெயரில் இன்று டாகினியை  வழிபடுகின்றனர். இத்தெய்வம் செல்வத்துக்கும் வெற்றிக்கும்  உரியதாகும். வளமை, நரி,  அரிசி, தேயிலை, மது, தொழில்துறை, வேளாண்மை, வணிகம், கருங் கொல்லர் ஆகிய அனைத்துக்கும் ஓ இனாரியே  காவல்  தெய்வம் ஆகும்.

இனாரி என்ற  தெய்வம் ஷிந்தோ மதத்தின்  தெய்வமாகும், ஷிந்தோ மதத்திற்குரிய இனாரி கோயில்கள் பௌத்த மதம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த பின்பு  டாகினி கோயில்களாக மாற்றப்பட்டன. இவ்வாறு இந்தியாவில் காளியும்  இடாகினி ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக உள்ளன. இவை இரண்டும் பல்வேறு  மாற்றங்களை காலப்போக்கில் அடைந்துவிட்டன. ஆனால் இங்கிருந்து ஜப்பானுக்கு சீனா வழியாக சென்ற டாகினி அங்கு டாகினி தென் என்ற பெயரில் அன்று  முதல் இன்று வரை எவ்வித மாற்றமும் அடையாமல் காவல் தெய்வமாக போற்றப்படுகிறாள்.

முனைவர் செ.ராஜேஸ்வரி

Related Stories: