வணிகத்தில் வளர்ச்சியை தருவாள் முத்தாரம்மன்

தங்களுக்குக் குலதெய்வமாக விளங்கிய அம்மனுக்கு முத்துக்களால் பாண்டிய மன்னர்கள் மாலைகளை அணிவித்து மகிழ்ந்தனர். எனவேதான் அந்த அம்மன், முத்தாரம்மன் என்ற பெயர் பெற்றதாகக் கூறுவர். மேலும் அம்மை முதலான நோய்களிலிருந்து பக்தர்களைக் காப்பதாலும், அன்னை

முத்தாரம்மன் என்றழைக்கப்படுகிறாள். ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் திருஉருவங்களுக்குக் கீழ், பீடத்தின் அருகில் முத்தாரம்மனின் சுயம்பு உருவம் உள்ளது. ஞானமூர்த்தீஸ்வரர் இடதுகாலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு, வலக்கையில் செங்கோலையும், இடக்கையில் திருநீற்றுப் பாத்திரத்தையும் ஏந்தியுள்ளார்.

சுவாமிக்கு இடப்புறம், முத்தாரம்மன் நான்கு திருக்கரங்களுடன், வலதுகாலை மடித்து, இடதுகாலை தொங்கவிட்டு அருள்பாலிக்கிறார்.

மூன்று மண்டபங்களோடு திகழ்கின்ற இந்த ஆலயத்தில் கருவறையை அடுத்துள்ள மகா மண்டபத்தில் பேச்சியம்மனும், இடப்புறம் கருப்புசாமியும், தெற்கு நோக்கி பைரவரும் உள்ளனர். கொடிமர மண்டபத் தென்பாகத்தில் அஸ்திர தேவரும், கீழ்ப்பாகம் விநாயகரும், மேற்கே பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கன்னி மூலையில் மகா வல்லப விநாயகரும், தென்புறம் நோக்கி இரண்டு பூதத்தார்களும் காட்சி தருகின்றனர்.

இந்த ஆலயத்தில் சுயம்புவாக எழுந்தருளிய முத்தாரம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது. இப்பகுதியை குலசேகர பாண்டியன் ஆட்சி செய்தபோது, ஒருநாள் அவன் கனவில் அம்மன் தோன்றி சுயம்புவாகதான் இருக்கும் இடத்தில், ஒரு கோயில் கட்டி வழிபாடு நடத்துமாறு ஆணையிட்டாள். மன்னன் தேவியின் ஆணைக்கேற்ப கோயிலை அமைத்தபிறகு, முத்தாரம்மனின் சக்தி அனைவருக்கும் தெரிய வர, மக்கள் இந்தச் சின்னஞ்சிறிய கடற்கரை கிராமத்துக்கு அலை அலையாக வரத் தொடங்கினர். இதற்கிடையில் பக்தர்கள் அன்னையின் திருமேனியை கண்குளிர தரிசிக்க விரும்பியபோது, தேவி அர்ச்சகரின் கனவில் தோன்றி கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மயிலாடி என்ற ஊருக்குச் செல்லுமாறு உத்தரவிட்டாள்.

இதே நாளில் மயிலாடியில் கடவுளர் சிலைகளை வடித்துக் கொடுக்கும் சுப்பையா ஆச்சாரி என்பவர் கனவிலும் அம்மன் தோன்றி ஞான மூர்த்திஸ்வரரான ஈஸ்வரனும் தானும் ஒரே பீடத்தில் எவ்வாறு காட்சி அளிக்க வேண்டும் என்று விளக்கி திருஉருவங்களை வடிக்குமாறு ஆணையிட்டாள். மேலும் தான் சுயம்புவாக எழுந்தருளியுள்ள இடத்தின் அருகிலேயே அவ்வாறு சிலைகளை அமைக்குமாறும் உத்தரவிட்டாளாம்.

சிற்பியும் தேவியின் ஆணையைச் சிரமேற்கொண்டு அம்மன், சுவாமி சிலைகளை வடித்தார். குலசை அர்ச்சகரும், பக்தர்களும், சுப்பையா ஆச்சாரியைச் சந்தித்து சுவாமி அம்பாள் சிலைகளைப் பெற்றுச் சென்று அம்மன் சுயம்புவாக இருக்கும் இடத்திலேயே பிரதிஷ்டை செய்தனர்.

இத்தலத்தில் ஆடிக்கொடை விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் குறவன் குறத்தி வேடம் அணிந்து, உண்டியல் ஏந்தி, கோயிலைச் சுற்றி வலம் வந்து, அங்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்து கோயிலில் சேர்ப்பது நேர்த்திக் கடனாக உள்ளது. அம்மை நோய் கண்டவர்கள் அம்மன் பீடத்தைச் சுற்றி தண்ணீர் கட்டச் செய்கின்றனர். இதனால் நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. மணப்பேறு, மகப்பேறு, மனக்கவலை, கொடிய நோய்கள் நீங்க, மாவிளக்கு போடுதல், அங்கப் பிரதட்சணம், அலகு குத்துதல், பூவோடு (தீச்சட்டி) ஏந்துதல் போன்றவை நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படுகின்றன.

முத்தாரம்மன் ஆலயத்தில் நடைபெறும் தசராத் திருவிழா இந்த ஆலயத்தின் முக்கியப் பெருவிழாவாகும். முத்தாரம்மன் ஆலய தசரா விழாவின்போது எண்ணற்ற பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருந்து, பல்வேறு வேடங்கள் தாங்கி வீதிகளில் உலா வருகின்றனர். தங்கள் பிரச்னைகள் தீர்ந்து தேவியின் அருள் கிட்டும் பொருட்டு நேர்த்திக் கடனாக வேடமேற்கொள்ளும் பக்தர்களும் உண்டு. இவ்வாறு வேடம் புனைந்து அம்மனோடு பவனி வருவது இத்தலத்தில் காணப்படும் ஒரு சிறப்பம்சமாகும். பத்தாம் நாள் தசமி திதியில் சுவாமி அம்பாள் பரிவார தேவதைகளுக்கும், மகிஷ வதத்திற்குக் கொண்டு செல்லப்படும் சூலத்திற்கும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

அன்று நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றபின், அம்பாள் மகிஷாசுரமர்த் தனி கோலத்தில் கடற்கரையை நோக்கிப் புறப்படுகிறாள். இந்தப் புறப்பாட்டின்போது காளி வேடம் அணிந்த ஏராளமான பக்தர்கள் அம்மன் கூடவே செல்கின்றனர். கடற்கரை சம்ஹார திடலில் மகிஷாசுர வதம் நடைபெறுகிறது. திருச்செந்தூரிலும், பிற முருகன் கோயில்களிலும் நடைபெறுகின்ற சூரசம்ஹாரம் போன்றே, இங்கும் மகிஷனின் அசுரத் தலையைக் கொய்தவுடன், அடுத்து சிங்கத் தலையோடும், எருமைத் தலையோடும், மகிஷன் போருக்கு வருவதாகவும், அவற்றையும் தேவி கொய்து வெற்றி வாகை சூடுவதாகவும் காட்டப்படுகிறது.

பின்னர் மேடையில் அம்பாள் எழுந்தருள, வாணவேடிக்கைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மறுநாள் அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் வழங்கி, மாலை ஆலயம் திரும்பியவுடன், கொடி இறக்கப்படுகிறது. இரவில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மறுநாள் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து குளிர்வித்து, தசரா விழா நிறைவடைகிறது. நெல்லையை அடுத்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடும் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் (கந்த சஷ்டி) திருவிழாவிற்கு நிகராக திருச்செந்தூருக்கு அருகிலேயே உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலய நவராத்திரி மகிஷாசுர சம்ஹார விழாவும் நடைபெறுகிறது.

Related Stories: