திருவனந்தபுரம்: மலையாள நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 2 நடிகர்கள் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மலையாள பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக சமீபகாலமாக நடிகைகள் துணிச்சலாக புகார் கொடுத்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த சம்பவம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. மலையாளத்தில் டிவி தொடர்கள் மற்றும் சினிமாவில் நடித்து வருபவர்கள் பிஜு சோபானம் மற்றும் ஸ்ரீகுமார். இவர்கள் இருவரும் பிரபலமான ஒரு மலையாள டிவி தொடரில் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் படப்பிடிப்பின்போது இவர்கள் இருவரும் ஒரு நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நடிகை கொச்சி இன்ஃபோ பார்க் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடிகர்கள் பிஜு சோபனம் மற்றும் ஸ்ரீகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு நடிகைகள் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு போலீஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என்று கொச்சி இன்ஃபோ பார்க் போலீசார் தெரிவித்தனர்.