அரசியலுக்கு வந்தால் முதல்வர் பதவி தருவதாக பேரம்: சோனு சூட் அம்பலம்

மும்பை: அரசியலுக்கு வந்தால் முதல்வர் பதவி தருவதாக பேரம் பேசினார்கள் என தெரிவித்துள்ளார் நடிகர் சோனு சூட். தமிழில் சந்திரமுகி படத்தில் அறிமுகமான சோனு சூட், பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். கொரோனா பாதிப்பு சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களது ஊர்களுக்கு செல்ல சோனு சூட் உதவினார். அப்போது முதல் பல்வேறு தரப்பினருக்கு பலவிதமான உதவிகளை இவர் செய்து வருகிறார். இதனால் இவருக்கு பீகாரில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில அரசியல் புள்ளிகள் தன்னை தொடர்புகொண்டது பற்றி சோனு சூட் கூறுகையில், ‘‘எனக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி என இதில் ஒன்றை தருவதாக கூறினார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். முதலில் எனக்கு முதல்வர் பதவி தருவதாக சொன்னார்கள். நான் அதை மறுத்தபோது, துணை முதல்வர் மற்றும் எம்பி பதவிகளை தருவதாகவும், அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால், அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். அரசியலில் சேர்ந்தவர்கள் 2 காரணங்களுக்காக மட்டுமே செல்கிறார்கள். ஒன்று பணம் சம்பாதிக்க, இன்னொன்று அதிகாரம் பெற. எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை’’ என்றார்.

Related Stories: