இருமுடி கட்டு

இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இவ்வாறு செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார். மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று. எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காண செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு…

இருமுடி பொருட்கள்: இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முன்முடியில் வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள்:

1. மஞ்சள் பொடி (குறைந்தது 100 கிராம்) (மலைநடை பகவதி, மஞ்சமாதாவுக்காக)

2. சந்தன பாக்கெட்

3. குங்கும பாக்கெட்

4. நெய் தேங்காய் - 1

5. சுதாதமான பசுவின் நெய்

6. விடலை தேங்காய் - 5 (எரிமேலி, சபரிபீடம், சரம்குத்தி, பதிட்டாம்படி ஏறும்போதும், இறங்கும்போதும்)

7. பன்னீர் பாட்டில் (சிறியது)

8. கற்பூர பாக்கெட்

9. பச்சரிசி

10. கருப்பு உலர் திராட்சை

11. பேரிச்சம்பழம், கற்கண்டு

பின் முடியில் சமையல் செய்து சாப்பிடுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த அளவு எடுத்து செல்லலாம். இதுவே நாம் இருமுடியை எடுத்து செல்லும் காரணம்…. ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

- G.சீதாபதி குருசுவாமி

Related Stories: