ஐதராபாத்: இனிமேல் தெலங்கானா மாநிலத்தில் அதிகாலை சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூன் நடித்த `புஷ்பா 2: தி ரூல்’ என்ற படம் கடந்த 5ம் தேதி திரைக்கு வந்தது. முன்னதாக இப்படத்தின் ஸ்பெஷல் பிரீமியர் காட்சி, கடந்த 4ம் தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சிக்கப்பள்ளியிலுள்ள சந்தியா தியேட்டரில் நடந்தது. சிறப்புக்காட்சிக்கு அல்லு அர்ஜூன் வந்தார். ஏற்கனவே ஸ்பெஷல் பிரீமியர் காட்சியைப் பார்த்து ரசிக்க ஏராளமான ரசிகர்கள் தியேட்டரில் குழுமியிருந்தனர். அப்போது அல்லு அர்ஜூனை நேரில் பார்க்க மேற்கொண்டு அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்தனர். அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த பெருங்கூட்டத்தில் சிக்கி மூச்சு திணறிய ரேவதி (39) என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் தேஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இதை தொடர்ந்து போலீசார் அல்லு அர்ஜூன் மற்றும் அவரது பாதுகாப்புக் குழுவினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தெலங்கானா மாநில அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி, ‘இனிமேல் தெலங்கானா மாநிலத்தில் எந்தப் படத்துக்கும் அதிகாலை சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி இல்லை’ என்று அறிவித்துள்ளார். இதுபோல் விஜய் நடித்த ‘வாரிசு’, அஜித் குமார் நடித்த ‘துணிவு’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தபோது நடந்த கொண்டாட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தது. இதற்குப் பிறகு தமிழக அரசு அதிகாலை சிறப்புக்காட்சிகளை முழுவதுமாக ரத்து செய்தது.
* அல்லு அர்ஜுன் உதவிக்கரம்
அல்லு அர்ஜுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசும்போது, ‘ரேவதியின் மரணம் அதிர்ச்சியை தந்துள்ளது. அவரது குடும்பத்தாரின் வலியில் நானும் பங்கேற்கிறேன். அந்த குடும்பத்துக்கு தேவையான உதவிகளை ெசய்வேன். எனது சார்பில் 25 லட்சத்தை ரேவதி குடும்பத்துக்கு வழங்குகிறேன். அவர்களின் மருத்துவ செலவுகளையும் நான் ஏற்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.