திருமண தடை நீக்கும் ஜடாமண்டல கால பைரவர்

நோய்களை தீர்க்கும் சேரன்மகாதேவி வைத்தியநாதர்

Advertising
Advertising

நெல்லை மாவட்டம் ேசரன்மகாதேவியில் அமைந்துள்ள அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோயில் தமிழ் முனி அகத்தியரால் நிலைநிறுத்தப் பெற்று வழிபடப்பட்டது என்பது ஊர் பெரியவர்கள் கூறும் வரலாறு ஆகும். வைத்திய கலைக்கு முதலாசிரியர் சிவபெருமான் ஆவார்.

அவரிடம் இதனை முருகப்ெபருமான் அறிந்தார். முருகனிடம் மாணவராக இருந்து இக்கலையை அறிந்தவர் அகத்திய முனிவர். எனவே வைத்தியநாதரை அகத்திய முனிவர் இப்பகுதியில் நிலை நிறுத்தி வணங்கினார் என கூறுவது பொருத்தமாக உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த கோயிலில் உள்ள சிவபெருமானை மெய்யுருகி வணங்கி வழிபட்டால் தீராத வயிற்றுவலி, கண் நோய், இருதயம் தொடர்பான நோய்கள் மற்றும் உடலில் உள்ள அனைத்து நோய்களும் தீர்ந்து விடும் என்பது கோயிலின் சிறப்பாகும். இதற்காக வேண்டுதலுடன் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இந்த கோயிலில் உள்ள கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் உள்ளிட்டவை ராஜராஜ சோழன் காலத்தில் அமையப்பெற்றது. மஹா மண்டபம் உள்ளிட்டவைகளை சடாவரம திரபுவனச் சக்கரவர்த்தி குலசேகரன் கடந்த 1322ம் ஆண்டு அமைத்துள்ளார்.பின்னர் விஸ்வநாத நாயக்கர் மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். இந்த ஊர் புராண காலத்தில் நாதாம்புஜ ஷேத்திரம் என்ற பெயருடனும் 10ம்நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் நிகரில் சோழச்சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடனும் விளங்கியது. ஸ்ரீமாற வல்லப மன்னனின் 2வது மகன் பராந்தகன் சேரநாட்டு இளவரசியான வானவன் மகாதேவியை மணந்தான். அந்த இளவரசியின் பெயரை ஊரின் பெயராக வைத்தான். அதுவே இன்றும் சேரன்மகாதேவி என நிலைபெற்று அழைக்கப்படுகிறது.

கோயிலில் ஜடா மண்டல கால பைரவர் சிறப்பான தோற்றத்தில் காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமியில் திருமஞ்சனம் மற்றும் வடை மாலை அணிவித்து வழிபாடு செய்தால் திருமணத்தடை, குழந்தையின்மை மற்றும் அனைத்து பிரச்சனைகளும் தீரும். இக்கோயிலில் தினமும் 5 கால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆககிய பூஜைகள் நடத்தப்படுகின்றன.

காலை 6.30 மணி முதல் 10 மணிவரையிலும் மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். ஐப்பசி உத்திர நட்சத்திர திருக்கல்யாண உற்சவம், சிவராத்திரி, ஆரூத்ரா தரிசனம், சூரசம்ஹாரம், சுப்பிரமணியர் திருக்கல்யாணம், உள்ளிட்டவை சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகும்.

நெல்லை - அம்பாசமுத்திரம் சாலையில் தாமிரபரணி நதிக்கு தெற்கே சேரன்மகாதேவி பஸ் நிலையத்திற்கு மேல்புறம் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் உள்ள சேரன்மகாதேவிக்கு நெல்லை மற்றும் பாபநாசத்தில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. நெல்லை, கல்லிடைக்குறிச்சி, அம்பையில் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

Related Stories: