வெனம் தி லாஸ்ட் டான்ஸ்: விமர்சனம்

மார்வெல் காமிக்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படம் உலகம் முழுக்க திரைக்கு வந்துள்ளது. எடியின் (டாம் ஹார்டி) உடலைக் கட்டுப்படுத்திய வெனம், அவரைக் கொடூர வில்லனாக வெளிப்படுத்தியது. பிறகு வெனமைக் கட்டுப்படுத்திய டாம் ஹார்டி, உலகைக் காப்பாற்றும் நபராக மாறி, உலகத்தை விட்டே வெனமை விரட்ட முந்தைய பாகத்தில் முயற்சித்தார். தற்போது அதன் தொடர்ச்சியாக இப்படம் வந்துள்ளது. வெனமை உடலில் சுமந்த டாம் ஹார்டி, மெக்சிகோவில் தலைமறைவாக இருக்கிறார். அவரை அமெரிக்க ராணுவம் தேடுகிறது.

உலகத்தை அழிக்க கோடெக்ஸ் என்ற ஒன்றை அடைய நினைக்கும் வில்லன் நல், அதைக் கண்டுபிடிக்க ஏலியன்களை பூமிக்கு அனுப்புகிறார். அந்த கோடெக்ஸ், டாம் ஹார்டியிடம் இருக்கும் வெனமிடம் மறைந்துள்ளது. அதைக் கைப்பற்ற வேண்டும் என்றால் வெனம், டாம் ஹார்டி ஆகியோரில் ஒருவர் மரணிக்க வேண்டும். வெனமாக டாம் ஹார்டி மாறும்போது மட்டுமே கோடெக்ஸ் இருப்பது ஏலியன்களுக்கு தெரியவரும். இந்நிலையில் டாம் ஹார்டி, வெனம் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? கோடெக்ஸ் என்ன ஆனது என்பது மீதி கதை. வெனம், எடி ஆகியோரின் நகைச்சுவை உரையாடல்கள் ரசிக்க வைத்திருக்கிறது.

எடி கேரக்டரில் டாம் ஹார்டி அசத்தியுள்ளார். வெனமுடன் நடத்தும் ஜாலியான சண்டைகள் மற்றும் வெனமின் கேலி, கிண்டல்களை சாந்தமாக எதிர்கொள்வது, வெனமைப் பிரியும்போது வெளிப்படுத்தும் மனவலி என்று, அனைத்து உணர்ச்சிகளையும் முகத்தில் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார். விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிரட்டுகின்றன. வெனத்தின் செயல்பாடுகள் ரசிக்கும்படி இருக்கிறது. அது விசித்திர ஏலியன்களிடம் மோதும் காட்சிகள் அட்டகாசம். படத்தின் நீளம் 1.30 மணி நேரம். முதல் பாதியை விட இரண்டாம் பாதி அதிவேகமாக நகர்கிறது. ஒளிப்பதிவு, இசை, கிராபிக்ஸ், நகைச்சுவை வசனங்கள் எல்லாம் பல இடங்களில் கைத்தட்ட வைக்கின்றன. கெல்லி மார்சல் இயக்கியுள்ளார். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி பிரமிப்பு ஏற்படுத்துகிறது. முதல் பாதியை இன்னும் அழுத்தமாகப் படமாக்கி இருக்கலாம்.

Related Stories: