அழைத்தால் துணை வருவான் அத்தி மாடன்

தேரிக்குடியிருப்பு, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள தாய்விளை ஊரைச்சேர்ந்தவர் நீலமேகம். இவர் அந்த ஊரைச்சுற்றியுள்ள அங்கமங்கலம், அதிராமபுரம், ராஜபதி, மணத்தி, நல்லூர், மலவராயநத்தம் உள்ளிட்ட ஏழு ஊரில் வாழும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களுக்கு துணி சலவை செய்யும் பணியை செய்து வந்தார். சலவை செய்யும் பணியில் நீலமேகத்துக்கு அவரது மனைவி சங்கரம்மாள் உதவி புரிந்தார். கணவனோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த சங்கரம்மாளுக்கு ஒரே ஒரு குறை அவளை கவலையில் ஆழ்த்தியது. 32 வயதான போதும். தனக்கு குழந்தை இல்லையே  என்ற ஏக்கம் அவளை வாட்டி வதைத்தது. இதனால் மிகவும் மனம் வருந்திய சங்கரம்மாள் தனது கணவன் நீலமேகத்திடம் முறையிட்டாள் உமக்கு இப்போது வயது 40 ஆகிறது. இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. குழந்தை ஒன்று பெற்றெடுக்காமலும், வாரிசு இல்லாமலும் மலடி என்ற பெயரோடு மடிந்து போக நான் விரும்பவில்லை என்று கூறி கதறி அழுதாள்.

உடனே நீலமேகம், தனது மனைவியை சங்கரன்கோயிலுக்கு அழைத்துச்சென்றார். அங்கு வயது முதிர்ந்த ஒரு பண்டாரம், நீலமேகத்திடம், ‘‘உனது மனைவி இன்றிலிருந்து 10 வது மாதம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுப்பாள். அந்த குழந்தை உனக்கு பிள்ளை இல்லாத குறையை போக்குமே, தவிர அது உன் குலம் தழைக்க உதவாது. என்றார். எப்படி இருந்தாலும் பரவாயில்லை. மலடி என்ற ஊரார் கேலி பேச்சுக்கு முடிவுகட்ட, நான் தாய்மை அடைய வேண்டும்’’ என்றாள் சங்கரம்மாள். அந்த பண்டாரம் ‘‘நீ நினைத்தபடியே நடக்கும். உன் புள்ளைக்கு 10 வயது ஆகும் போது 3 கைப்புடி அளவுக்கு அணா (காசுகள்) சேர்த்து கொண்டு வந்து சங்கரநயினார் உண்டியலில் போடு’’ என்று கூறினார். அவர் சொன்னது போலவே பத்தாவது மாதம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் சங்கரம்மாள். அந்த குழந்தைக்கு நாராயண மூர்த்தி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

சிறு வயதிலேயே கொழு, கொழு குழந்தையாக இருந்த நாராயண மூர்த்தி, வாலிப பருவத்தில் உடல் பருமனாகவும், நல்ல உயரமான வளர்த்தியும் கொண்டிருந்தான். சலவை தொழிலாளி என்பதால் ஊருக்கு கிழக்கு பக்கம் மயான பகுதியில் குடில் அமைத்து வாழ்ந்து வந்தனர். தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் தனது மகனை எடுத்துக்கொண்டு சங்கரம்மாள் ஊருக்குள் வந்து வீடுகளில் பலகாரங்கள் பெற்றுச்செல்லுவாள்.

நாட்கள் செல்ல செல்ல வளர்ந்து வந்த நாராயணமூர்த்தி, தாயிடம் ‘‘நாமளும் ஊருக்குள்ளேயே வீடு வச்சு இருக்கலாமே’’ என்று கூற, அதற்கு அவன் தாய், ‘‘நம்ம துணி வெளுக்கிறவைங்க,  நம்மள அவங்க, ஊருக்குள்ள இருக்க விட மாட்டாங்க’’ என்று கூறியதை கேட்ட அவன், சிந்திக்கலானான். ஒரு முறை குளத்தில் துணி வெளுத்துக்கொண்டிருக்கும் போது, அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு ஒன்று, பிரசவிக்க முடியாமல் அவதிப்பட்டது. அதைக்கண்டு மாட்டுக்கு சொந்தக்காரர் செய்வதறியாமல் திகைத்தார். அதை பார்த்துக் கொண்டிருந்த நாராயண மூர்த்தி, மாட்டின் உடலிலிருந்து வெளிவர முடியாமல் இருந்த கன்றின் தலையை பிடித்து இழுத்து வரவைத்தான். எருமை மாடும் அதன் கன்றும் ஆரோக்யமாக இருந்தது. அந்த மாட்டுக்கு சொந்தக்காரர், ‘‘நல்ல காரியம் பண்ணிபுட்டே, இந்தாலே இந்த அனாவ வச்சுக்கோ என்று கூற, இந்த அணா எனக்கு வேண்டாம். ஒரு படி அரிசி வேணும்’’ என்று கூறினான் நாராயணமூர்த்தி. அப்போது குறுக்கிட்ட சங்கரம்மாள், ‘‘ஏய்யா மூர்த்தி, ஊருல பெரியவங்க அவிய கிட்ட போய், அரிசி கேக்கியலே, இங்க வாலே.’’ என்று கூற, மாட்டுக்கு சொந்தக்காரர் ‘‘என்ன சங்கரம், அவன் தப்பா கேட்டுப்புட்டான். செஞ்சதுக்கு கூலி கேட்டிருக்கான். சரிலே, வா வீட்டுக்கு’’ என்று ஊருக்குள் அழைத்துச் சென்று அரிசி கொடுத்து அனுப்பினார். ஊரிலுள்ளவர்கள் காரணம் கேட்க, நடந்ததை அவர் கூறினார். இதன் காரணமாக நாராயண மூர்த்தியின் செயல் ஊரெங்கும் பரவிற்று.

தாய், தகப்பன் துணி வெளுக்கும் ஏழு ஊர்களிலும் நாராயண மூர்த்தி கால்நடைகளுக்கான நாட்டு மருத்துவராக அங்கீகரிக்கப்பட்டான். எல்லோரும் அவனை தடியன் என்றே அழைத்து வந்தனர். மேலும் அவனை மகிழ்விக்கும் பொருட்டு தடி வீரன் என்றும் அழைத்து வந்தனர். நாராயணமூர்த்தி, தனது தாய் வழி தாத்தா மூலம் மை போட்டு குறி பார்க்கும் வித்தையை கற்றுக்கொண்டான். அதனால் கால் நடைகள் காணாமல் போனால் வெற்றிலையில் மை போட்டு பார்த்து சொல்வது, கணவன் மனைவியிடத்தில் ஒற்றுமையின்றி இருந்தால் வசிய மை கொடுத்து இருவரையும் சேர்த்து வைத்தல் போன்ற வேலைகளையும் செய்து வந்தான்.அந்த காலக்கட்டத்தில் அரண்மனைக்கு ஏவலர்களாகவும், ஏழு ஊரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு நாட்டாண்மையாகவும் விளங்கியவர்கள்  அந்த இனத்தைச்சேர்ந்த செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன் இந்த மூன்று பேரும்தான். இதில் செம்பாரக்குடும்பனுக்கு ஏழு ஆண் குழந்தைகளும் சொர்ணம் என்ற பெண் குழந்தையும் இருந்தனர். தனது தந்தை நாட்டாண்மை என்பதால் அதிகமான மிடுக்குடன் திகழ்ந்தாள் சொர்ணம். ஒரு முறை அவள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிலிருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கு சென்று கொண்டிருந்த போது, வழியில் ஒருவன் தனது மனைவியை அடித்து உதைத்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த சொர்ணம், அவனை பிடித்து கன்னத்தில் அறைந்து, அவன் பிடியிலிருந்த அவனது மனைவியை விலக்கி விட்டாள்.

இதையறிந்த அவளது அண்ணன் காளையன் தனது தந்தையிடம் சென்று கூறினான். உடனே மகளை அழைத்தார் செம்பாரக்குடும்பன் ‘‘ஏலே, சொர்ணம் மூத்தவன் சொல்லுவது உண்மையாலே’’ என்றார்.‘‘எப்போய், அண்ணன் கண்டு பாதி, காணாது பாதி சொல்லுதான்’’. என்று சொர்ணம் கூறியதும். குறுக்கிட்டான் காளையன், ‘‘எப்போய் எல்லாம் நீ கொடுக்கிற இளக்கம்தான், என்ன பேச்சி பேசுது பாரு, என் எச்சி பால் குடிச்சு வளர்ந்த புள்ள.’’ என்றான். ‘‘விடுல, அவளுக்கு என் ஆத்தா பேரு விட்டிருக்கேன். அவ, எங்க ஆத்தா மாதி வீரமுள்ளவ. நான் சத்தம் போட்டு வைக்கேன். போங்கல போங்க, போய் சோளங்காட்டுல சோலிய பாருங்க’’ என்று குரல் கொடுக்க மகன்கள் வெளியே சென்றனர். சோளக்காட்டுக்கு போன, அண்ணன் மார்களுக்கு அம்மா கொடுத்தனுப்பிய உளுந்தங்கஞ்சியை மதிய வேளை  கொண்டு சென்றாள். தன்னுடன் சித்தப்பா மகளையும் அழைத்துச் சென்றாள். செல்லும் வழியில் சகதியை மிதித்ததால் குளத்தில் கால் கழுவ இறங்கியவள் ஆழத்தில் சிக்கிக்கொள்ள, சொர்ணம் சத்தம் போட்டு கத்தியவாறு தண்ணீருக்குள் இறங்க, அப்போது அங்க வெள்ளாவியில் இருந்த நாராயண மூர்த்தி, குளத்தில் இறங்கி அந்த சிறுமியை மீட்டதோடு, சொர்ணத்தையும் கரைசேர்த்தான்.  நன்றி கூறிய சொர்ணத்திடம், நாராயண மூர்த்தி கூறினான்.

‘‘நன்றி இருக்கட்டும், நான் தொட்டு தூக்கினது ஊருல யாருகிட்டயும் சொல்லி புடாதீக, என்னை விட்டு வைக்கமாட்டாக’’ என்றான்.‘‘ம்ம்... அதவிட என்ன ஒருத்தனும் கட்டிக்கமாட்டான்’’ என்றாள் அவள். அதற்கு அவன், ‘‘அப்படி ஒரு நிலை வந்தால் நான் கட்டிக்கிறேன்.’’ என்று கூற, ‘‘ஏன், ரெண்டு பேரும் செத்துப்போகவா’’ என்று சொர்ணம் கேட்க, ‘‘கட்டிகிட்டு இங்கேயா இருக்கப் போறோம். வேற ஊரு, தேசம் பார்த்து போக வேண்டியது தான்.’’‘‘ஆசைய பாரு ம்...’’ என்று கூறி சென்றாள் சொர்ணம். நாட்கள் செல்ல, செல்ல அவர்களிடையே இருந்த காதல் வளர்ந்தது. ஒரு நாள் மாலை பொழுதில் இருவரும் குளத்தின் கரையோரம் அருகே அருகே அமர்ந்த படி பேசிக்கொண்டிருக்க, அதைக்கண்ட சொர்ணத்தின் உறவுக்காரன் ஒருவர் அவர்கள் அண்ணன் மார்களிடம் சென்று நம்ம தங்கச்சிய அந்த தடியன் வசியமை வச்சி மயக்கி புட்டான் என்று சொல்ல, அவர்கள் வந்து நாராயணமூர்த்தியை கண்ட துண்டமாக வெட்டி கொன்றனர். சொர்ணத்தை அடித்து வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

சொர்ணத்தை வேறு ஊருக்கு திருமணம் செய்து அனுப்பி வைத்தனர். ஓராண்டு முடிந்த பின்பு ஊருக்கு மேற்கு புறம் நின்ற அத்திமரத்தில் ஆவியாக தடிவீரன் இருக்கிறான். அந்த பக்கம் கன்னிபொன்னுங்கள், கர்ப்பிணிகள், மணமுடிந்த புதுப்பொண்ணுங்க யாரும் போகாதீங்கன்னு ஊரில் பல பேரு சொல்லிக் கொண்டிருக்கும் வேளை, ஊரில் அடிக்கடி மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களில் பார்த்தால் முதுகில் ஒரு ஆணின் கையின் ஐந்து விரல்களும் பதிந்து இருக்கும். இப்படி வெள்ளி, செவ்வாய் நாட்களில் குறைந்தது 3 சாவுகளாவது ஏற்படலாயிற்று. இதனால் அஞ்சிய ஊர்மக்கள் ஒன்று கூடி, ஆவியாகி துன்புறுத்தும் தடிவீரனை சாந்தப்படுத்த பல வகை பலகாரங்களும், அறுசுவை உணவும் சமைத்து அத்தி மரத்தின் அடியில் வைத்து பூஜித்தனர். பின்னர் இது ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி நாள் நடக்கலாயிற்று. பின்னர் சிலை வடிவம் கொடுத்தவர்கள் அத்திமாடன் என பெயரிட்டு வழிபட்டு வந்தனர். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் அத்திமாடன், தடிமாடன் என பெயர்களில் வழிபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பிலுள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில் அத்திமாடன் நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார்.

படங்கள்: ஆர். பரமகுமார்,

உடன்குடி கோ. சாமுவேல்ராஜ்

சு.இளம் கலைமாறன்

Related Stories: