கருடன் – திரை விமர்சனம்

ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் , வெற்றிமாறன் கதையில், மேலும் அவரின் தயாரிப்பிலும் சசிகுமார், சூரி, சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், சிவதா நாயர், ரேவதி, ரோஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ கருடன்’.

ஆதரவற்ற சிறுவனாக சொக்கன் ( சிறுவயது சூரி) ஒரு மடத்தில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அங்கே எப்போதும் நண்பர்களுடன் விளையாட வருகிறார்கள் ஆதி ( சிறுவயது சசிகுமார்) , மற்றும் கர்ணா ( சிறுவயது உன்னி முகுந்தன்). எதிர்பாராத விதமாக கர்ணாவின் உயிரை காப்பாற்றுகிறார் சொக்கன். இதனால் சொக்கன் மீது அன்பு உண்டாக அவரையும் தன் வீட்டிற்கு கூட்டிச் செல்கிறார் கர்ணா. அன்று முதல் கர்ணாவிற்கு நிழல் போல பாதுகாப்பு விசுவாசியாக மாறி நிற்கிறார் சொக்கன். இதற்கிடையில் ஊர் கோவில் மூலம் ஆதி கருணா சொக்கன் மூவருக்கும் இடையில் சில பிரச்சனைகள் வர நினைத்து பார்க்க முடியாத அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இந்த அசம்பாவிதங்கள் மூவரின் உறவை என்னவாக மாற்றுகிறது , பின்னணி என்ன என்பது மீதிக்கதை.

தான் உருவாக்கிய நாயகனுக்கு தாமே ஒரு பாதையை வகுக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார் போல வெற்றிமாறன். மீண்டும் சூரிக்கு தனது கதை மற்றும் தயாரிப்பு மூலம் அடுத்த ஏணியையும் வைத்திருக்கிறார். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு முதல் படத்தில் எட்டடி எனில் இரண்டாவது படத்தில் 16 அடி பாய்ந்து தனது முழு திறமையையும் காட்டி நடிப்பில் மிளிர்கிறார் நடிகர் சூரி.

அவருக்கு பக்க பலமாக என்னதான் தங்கள் கதாநாயகர்களாக நடித்திருந்தாலும் சினிமாவில் கதாபாத்திரம் தான் உண்மையான ஹீரோ என்பதை புரிந்து கொண்டு சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன் என மூவருமே கதைக்கு அவ்வளவு முக்கியத்துவம் பொருந்தியவர்களாக தங்கள் பங்கைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக ஒருவரை விட்டு ஒருவரை எடுத்தால் கூட கதை குழப்பம் ஆகிவிடும் என்கிற ரீதியில் கதாபாத்திரங்கள் அவ்வளவு கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தனக்கு கொடுத்த வேலையையும் சரியாக புரிந்து கொண்டு எந்த மீட்டரில் நடிப்பை கொடுக்க முடியுமோ அத்தனை பேரும் கொடுத்திருக்கிறார்கள். சிவதா, ரேவதி, ரோஷினி இவர்கள் மூவரும் கூட கதைக்கு மிகப் பொருத்தம். இவர்களும் ஏதோ வந்தோம் டூயட் பாடினோம் ஒரு சில காட்சிகளில் கண்ணீர் சிந்தினோம் என்று இல்லாமல் கதையில் அவ்வளவு ஆழமாக இவர்களின் கேரக்டரும் பிணைக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளில் நீளங்களும் தொய்வும் இருப்பினும் கூட கதைக்களம் அப்படியே தென் தமிழகத்தில் நடக்கும் கோவில் மற்றும் அதைச் சுற்றி நிகழும் சம்பவங்களை மிக அற்புதமாக கண்முன் காட்டுகிறது. இடைவேளையில் சூரி ஒரு பக்கம் நம்மை ஆட்கொள்கிறார் எனில் மறுபக்கம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நம்மை கட்டிப் போடுகிறது. அவரின் பாடல்களும் கூட படத்தில் வெறுமனே இடத்தை பிடிக்காமல் மனதில் நிற்கின்றன.

ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு, பிரதீப் ராகவின் எடிட்டிங்கும் கதையில் மேலும் சிறப்பு சேர்த்திருக்கின்றன. என்னதான் விசுவாசம் என்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு என நமக்கே ஒரு சில இடங்களில் தோன்றினாலும் கதையில் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள்.

விசுவாசமும் நன்றியும் ஒரு பக்கம் இருப்பினும் நியாயம், தர்மம் என இன்னொரு புறமும் மனித மனம் பார்க்கத்தான் வேண்டும் என்கிற ஆழமான கருத்தை சொன்ன விதத்தில் கருடன் முக்கியத்துவம் வாய்ந்த படமாக மாறி இருக்கிறது.

The post கருடன் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: