வளர்ப்பு நாய்களுக்கு ரூ45 கோடி சொத்துகள் எழுதி வைத்த மிதுன் சக்ரவர்த்தி

மும்பை: கடந்த 48 வருடங்களாக இந்தி, பெங்காலி, பஞ்சாபி, ஒரியா, போஜ்புரி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் மிதுன் சக்ரவர்த்தி (74). தமிழில் 2015 ஜூன் 26ம் தேதி வெளியான ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற படத்தில் நடித்த அவருக்கு நிழல்கள் ரவி டப்பிங் பேசினார். இயக்குனர் ரவிராஜா பினிஷெட்டி தயாரிப்பில் அவரது மூத்த மகன் சத்ய பிரபாஸ் பினிஷெட்டி இயக்கினார். இளைய மகன் ஆதி, நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்தனர். கடந்த 2014 முதல் 2016 வரை மிதுன் சக்ரவர்த்தி ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தார். திரைத்துறை மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பை பாராட்டி, ஒன்றிய அரசு அவருக்கு ‘பத்ம பூஷண்’ விருது வழங்கி கவுரவித்தது. சில படங்களை தயாரித்துள்ள அவர், செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். எந்த நாட்டுக்குச் சென்றாலும், அங்குள்ள உயர் ரக மற்றும் அதிக விலை கொண்ட நாய் வாங்கி வந்து வளர்ப்பது அவரது வழக்கம்.

ஏறக்குறைய 120 நாய்களை வளர்த்து வரும் மிதுன் சக்ரவர்த்தி, மும்பை அருகிலுள்ள மட் தீவில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து, அதில் அனைத்து நாய்களையும் பராமரித்து வருகிறார். இதற்காக ஏராளமான பணியாளர்களை வேலைக்கு நியமித்துள்ள அவர், அநாதையான தெரு நாய்களையும் தத்தெடுத்து பராமரிக்கிறார். ஒவ்வொரு நாய்க்கும் தனி அறை இருக்கிறது. அதற்கு விளையாட்டு மைதானம், விளையாட்டு பொருட்கள் மற்றும் உணவருந்தும் இடம், மருத்துவ வசதி, பாத்ரூம் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தனது நாய்களை தொடர்ந்து பராமரிப்பதற்காக, ரூ45 கோடி சொத்துகளை மிதுன் சக்ரவர்த்தி எழுதி வைத்திருக்கிறார். இத்தகவலை மிதுன் சக்ரவர்த்தியின் மருமகளும், நடிகையுமான மடால்சா ஷர்மா தெரிவித்துள்ளார். இதையறிந்த ரசிகர்களும், நெட்டிசன்களும், மிதுன் சக்ரவர்த்தியின் மனிதநேயத்தை கமென்ட் மூலம் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.

The post வளர்ப்பு நாய்களுக்கு ரூ45 கோடி சொத்துகள் எழுதி வைத்த மிதுன் சக்ரவர்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: