எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் வேலூர் செல்லியம்மன்

வேலூர் பாலாற்றின் கரையில் குடிகொண்டு தன்னை நாடிவரும் மக்களின் குறைகளை தீர்த்து நலம் காத்து வருகிறாள் உலகாளும் நாயகி, கிராம தேவதை செல்லியம்மன். மன்னர்கள் காலம் தொட்டு இன்றுவரை வேலூரில் உள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர், தாரகேஸ்வரர் கோயில்களின் பிரம்மோற்சவ விழாக்களின்போது இந்த அம்மனுக்கு முதல் பூஜை செய்த பிறகுதான் பிற நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எத்தமரெட்டியின் முதல் மனைவிக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பொம்மி, திம்மி. இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகள். சொத்துப் பிரச்னையில் இரண்டாவது மனைவியின் மகன்கள், முதல் மனைவியின் மகன்களான பொம்மி, திம்மி இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினர். அவர்கள் இருவரும் தப்பி வந்து சேர்ந்த இடம் வேலூர் பாலாற்றங்கரை. அப்போது வேலூர் பிரதேசத்தை ஆண்ட மன்னனிடம் தங்கள் நிலைமையைச் சொல்லி தங்களுக்கு இடம் ஒதுக்கும்படி கேட்டனர்.

Advertising
Advertising

மன்னன் காட்டிய இடத்தில் வாழ்ந்தவர்கள் அங்கிருந்த எல்லையம்மன் கோயிலில் வழிபாடுகளை செய்தனர். அந்த கோயிலில் இருந்த சப்தமாதாக்களில் ஒருத்தியை தங்கள் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியாக பாவித்து வணங்க ஆரம்பித்தனர். ஒருநாள் ஊருக்குள் நுழைந்த கொள்ளையர்களை திம்மியும், பொம்மியும் சாமுண்டீஸ்வரியின் சக்தியை பெற்று பந்தாடி ஊரைவிட்டே துரத்தினர். இதன் மூலம் அம்மனின் மகிமையை உணர்ந்து கொண்ட மக்கள், அன்னையை செல்லியம்மன் என்று பெயர் சூட்டி வணங்க தொடங்கினர். இன்றுவரை தன்னை நாடிவரும் மக்கள் கேட்டதை அள்ளித்தரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள் செல்லியம்மன். கருவறையில் பிரம்மஹி, வராகி, வைஷ்ணவி, சாமுண்டீஸ்வரி, கொளமாரி, ராஜேஸ்வரி, செல்லியம்மன் ஆகிய சப்த மாதாக்கள் வீற்றிருக்கின்றனர். இவர்களில் பிரதானமாக தீச்சுவாலை கிரீடத்துடன் 4 கைகளில் டமருகம், சூலம், பாசம், கபாலம் ஏந்தி சுகாசனத்தில் கிழக்கு நோக்கி இன்முகமாக அருள்பாலிக்கிறாள் செல்லியம்மன்.

அம்மனின் வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் வீரபத்திரரும் வீற்றிருக்கின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் மலர்களால் கண்கவர் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறாள் அன்னை. ஆடிமாத உற்சவத்தின்போது காலை முதல் மாலைவரை பக்தர்களால் தொடர்ந்து உற்சவருக்கு பால்குட அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பு. கோயிலின் தலவிருட்சமாக மூங்கில், அத்தி, வேம்பு ஆகிய மூன்றும் உள்ளன. குழந்தை பேறு வேண்டுபவர்கள் மூங்கில் விருட்சத்தில் தொட்டில் கட்டி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். திருக்கோயிலின் பிராகாரத்தின் முன் அணையா விளக்கு ஒளிவிடுகிறது. அதன் அருகே எலுமிச்சை மூடியில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் தம் வேண்டுதல் நிறைவேற வழிபடுகின்றனர். தன்னைத் தேடிவந்து தரிசிப்பவர்களுக்கு நன்மையே செய்கிறாள் செல்லியம்மன். ராகுகாலத்தில் தீபமேற்றுவது, வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்வது, அங்கபிரதட்சணம் செய்வது எல்லாம் தொடர்ந்து நடக்கின்றன.

அவர்களது வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே நிறைவேற்றித் தருவதில் அன்னைக்கு நிகர் அன்னையே. வேண்டுதல் நிறைவேறியதால் மகிழ்ச்சியுடன் வந்து அன்னையை தரிசித்து செல்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. கோயிலில் வழக்கமான வழிபாடுகளோடு, தங்கள் வீட்டு விசேஷங்கள் நல்லபடியாக நடந்தேறவேண்டி அம்மனுக்கு முதல் பூஜையும் செய்கிறார்கள் பக்தர்கள். பழமைவாய்ந்த இந்தக் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தவர், மறைந்த பஸ் அதிபர் டிகேபி சுந்தரம். ஒருநாள் சுந்தரத்தின் கனவில் தோன்றிய அம்மன் ஊரைக் காக்கும் என்னை முள்புதரில் பாழடைந்த நிலையில் விட்டுள்ளீர்களே? நீதான் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று ஆணையிட்டாள்.

அதன்படி அவரே கோயிலை புனரமைத்ததோடு, சுற்றிலும் கல்மண்டபத்தை ஏற்படுத்தி கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்லும் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயிலில் 1983ம் ஆண்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், 1999ம் ஆண்டு சொர்ணபந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றன. கோயிலை சுற்றிலும் மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமைதோறும் வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்களால், வெள்ளித்தேர் கோயிலை சுற்றி வலம் வருகிறது. எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும் செல்லியம்மனின் திருத்தலம், வேலூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

Related Stories: