சுவாமிமலை கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம் : 13ம் தேதி சூரசம்ஹாரம்

கும்பகோணம்: சுவாமிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று துவங்கியது. வரும் 13ம் ேததி சூரசம்ஹாரம் நடக்கிறது.  முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் உள்ளது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கொண்டாடப்படும். அதன்படி இவ்விழா நேற்று காலை சண்முகர் சுவாமி, நவவீரர்கள், பரிவாரங்களுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி துவங்கியது. இதைதொடர்ந்து 17ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும் சுவாமி வீதிவுலா நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 13ம் தேதி 108 சங்காபிஷேகம், சிறப்பு தீபாராதனை, தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பட்டு அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு சன்னதி தெரு மற்றும் தெற்கு வீதியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா விக்னேஷ்வர பூஜையுடன் நேற்று முன்தினம்  துவங்கியது. இதைதொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன்  கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.  

இதைதொடர்ந்து தினம்தோறும் இரவு அன்ன வாகனம், மான் வாகனம், பூத வாகனம், யானை  வாகனம், ரிஷப வாகனம், ஆடு, மயில் வாகனம், குதிரை வாகனத்தில் சுவாமி  வீதியுலா நடக்கிறது. வரும் 13ம் தேதி இரவு சூரசம்ஹாரம், 14ம் தேதி  திருக்கல்யாணம் மற்றும் முத்துப்பல்லக்கு நடக்கிறது. 17ம் தேதி தீர்த்தம்  கொடுத்தல், யாகசாலை கெடம் அபிஷேகத்துடன் கொடியிறக்கத்துடன் விழா  நிறைவடைகிறது. 18ம் தேதி சிறப்பு அபிஷேகம், ஊஞ்சல் ஏகாந்த சேவை நடக்கிறது.

Related Stories: