சபரி விமர்சனம்

தன்னைக் காதலித்து திருமணம் செய்த கணேஷ் வெங்கட்ராமன், ஆபீசில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடையும் வரலட்சுமி, உடனடியாக விவாகரத்து கேட்டு தன் கணவரை விட்டுப் பிரிகிறார். கூடவே தனது 5 வயது மகளை அழைத்துச் செல்கிறார். பிறகு தனது படிப்புக்கேற்ற வேலைக்காக அலையும் அவர், யாரோ சிலரால் தன் மகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணர்கிறார்.

அப்போது மனநலக் காப்பகத்தில் கொலை செய்து விட்டு தப்பித்து ஓடிவந்த மைம் கோபி, வரலட்சுமி யின் மகளைக் கடத்து கிறார். ஒரு கோடி ரூபாய் தந்தால் மகளைத் திருப்பி அனுப்பி வைப்பதாக அவர் மிரட்ட, அவ்வளவு பணத்தையும் திரட்ட முடியாமல் வரலட்சுமி தவிக்கிறார். இந்நிலையில், அந்த சிறுமியின் கதி என்ன? தனது மகளை வரலட்சுமி காப்பாற்றினாரா என்பது மீதி கதை. மகள்தான் உலகம் என்று நினைத்து பாசத்தைப் பொழியும் தாயாக நடித்துள்ள வரலட்சுமி, மகள் கடத்தப்பட்டதை அறிந்து துடிக்கும்போது கண்கலங்க வைக்கிறார்.

மகளை மீட்பதற்கு தனியாளாகப் போராடும் அவர், சண்டைக்காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார். தன் மனைவிக்கு துரோகம் செய்ததை நியாயம் என்று சொல்லும் கணவராக வரும் கணேஷ் வெங்கட்ராமன், வரலட்சுமிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்த ஆடும் நாடகம் சுமார் ரகம். சிறுமி கிருத்திகா, மைம் கோபி, ஷஷாங்க் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.

மகள் மீதான பாசம், தம்பதி களுக்கு இடையிலான ஈகோ மோதல், சிறுமி கடத்தல் என்று படத்தை இயக்கியுள்ளார், அனில் கட்ஸ். திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்து, காட்சிகளின் வேகத்தையும் அதிகரித்திருக்க வேண்டும். ராகுல் ஸ்ரீவத்சவ், நானி சமிடிஷெட்டியின் ஒளிப்பதிவு மற்றும் கோபி சுந்தரின் பின்னணி இசை, காட்சிகளை நகர்த்த உதவி செய்துள்ளன. முழுநீள தெலுங்கு படம் பார்த்த மாதிரி இருக்கிறது.

The post சபரி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: