நம்மாழ்வார் மங்களசாசனம் செய்த ஆதிகேசவ பெருமாள் கோயில்

பெருமாள் கோயில்கள் குமரி மாவட்டத்தில் ஏராளம் உள்ளன. இதில் பன்னிரு ஆழ்வார்களில் தலைமை சான்றவரான நம்மாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்கள் இரண்டு. ஒன்று திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில், மற்றொன்று திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில். திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றாகும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டது இக்கோயில். தரை மட்டத்தில் இருந்து 5 மீட்டர் உயரமுள்ள பெரிய திட்டில் அமைந்துள்ளது. கோயிலின் பிரமாண்டமும், கோயிலை சுற்றி மூன்று புறமும் ஓடும் ஆறும் இதன் சிறப்பு ஆகும். கருவறை மேற்கு பார்த்து அமைந்துள்ளது. ஆதிகேசவனின் சிரசு தெற்கே, பாதம் வடக்கே என அமைந்துள்ளது. பரளியாறு சிரசில் இருந்து பாதம் வழி ஓடி கோதையாற்றில் கலக்கிறது.

மேற்கு வாசலில் சிங்க முகப்பு தூண்கள், 18 படிகள் உள்ளன. இந்த கோயிலின் முக்கிய வாசல் மேற்கு நோக்கியது என்றாலும் கிழக்கு வாசலையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கு வாசலில் நுழைந்ததும் கொடிமரம், ஸ்ரீபலிக்கல் பீடம், நான்கு பிரகாரங்கள் உள்ளன. ஸ்ரீபலி மண்டபத்தில் நிறைய சிற்பங்கள் உள்ளன. இதனை அடுத்து இருப்பது நாலம்பலம் ஆகும். இதன் எதிரே நமஸ்கார மண்டபம் உள்ளது. உட்பிரகாரத்தை சுற்றிலும் மேல்மாடியுள்ள சுற்றுமாடம் உண்டு. குமரி மாவட்டத்தில் இத்தகைய அமைப்புடைய ஒரே கோயில் இதுதான். ஸ்ரீகோயில் கருவறை ஒற்றைக்கல் மண்டபம் என்னும் இரு பகுதிகளை உடையது. ஒற்றைக்கல் மண்டபம் 12ம் நூற்றாண்டில் செப்பனிடப்பட்டது. கோயில் கருவறை மூன்று வாசல்களை உடையது. இது செவ்வக வடிவமானது.

இடதுபுற வாசல் வழி கேசவனின் திருப்பாதங்களையும், வலதுபுற வாசல் வழியாக சிரசு பகுதிகளையும், நடுவாசல் வழி மார்பு பகுதியையும் தரிசிக்கலாம். ஸ்ரீகோயில் அதிஷ்டானம், உபானம், சக்தி, முப்பட்டை, குமுதம், கண்டனம், பட்டி, வேதிகை என்னும் முறைப்படி கட்டப்பட்டது. கருவறையை சுற்றிலும் பிற்கால சோழர்களின் ஆரம்பகால அமைப்பான கந்தவார் என்னும் போலி வாசல்கள் உண்டு. கருவறையில் ஆதிகேசவன் பாம்பின் மேல் பள்ளி கொண்ட வடிவில் இருக்கிறான். 16 ஆயிரத்து எட்டு சாளக்கிராமங்களால் உருவாக்கப்பட்ட படிமத்தின் மேல் கடுசர்க்கரை சாந்து பூசப்பட்டு உருவாக்கப்பட்டது இந்த சயன படிமம். கருவறை கிழக்கு சுவரில் வரிசையாக மது, கைடவர், சூரியன் ஆகியோரும், ஆயுத புருஷர்களாக சக்கரம், வாள், கதை, வில், சங்கு ஆகியனவும் உள்ளன. சந்திரன், கருடன் புடைப்பு சிற்பங்களாகவும், பாம்பணையின் முன் பூதேவி, ஸ்ரீதேவி, ஹாதலேய முனிவர் கடு சர்க்கரை படிமங்கள் உள்ளன.

கோயிலில் தாந்திரீக பூஜை முறை வழக்கில் உள்ளது. பூஜையை பித்த பூஜை, மூர்த்தி பூஜை, பிரசன்ன பூஜை, மானச பூஜை என குறிப்பிடுவர். இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. மூலவரான அர்ச்சனா மூர்த்திக்கு அபிஷேகம் உண்டு. இது பித்த பூஜை. நைவேத்தியம், தீபாராதனை காட்டுதல் பிரசன்ன பூஜை. இறை உருமுன் அமர்ந்து முத்திரை காட்டி வழிபாடு செய்தல் தாந்திரீகம் மானச பூஜை. சித்திரை விஷூ, பவுர்ணமி, ராமநவமி, பரணி, வைகாசி விசாகம், ஆடி மகர சங்கராந்தி, கோயில் நிறை, ஆவணி கிருஷ்ணஜெயந்தி, திருவோணம், கார்த்திகை விருச்சிக விளக்கு, மார்கழி சொர்க்கவாசல் ஏகாதசி, ஐப்பசி, பங்குனி மாதங்களில் 10 நாட்கள் நடக்கும் திருவிழா, பங்குனி மாத ஆறாட்டுவிழா சிறப்பு நிறைந்தவை. ஒருமுளைற பிரம்மா, விஷ்ணுவை தரிசிக்க யாகம் செய்தார். அந்த யாகச்சடங்கில் கேசன் என்ற அரக்கனும், கேசி என்ற அரக்கியும் பிறந்தனர். அவர்கள் பிரம்மனை வேண்டி மரணமில்லா வாழ்வு பெற்றனர்.

கேசன் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். இந்திரன் போரிட்டும் பலன் இல்லை. விஷ்ணு கேசனை அழிக்க முயன்றும் முடியவில்லை. அப்போது பராசக்தி கேசனை அழிக்க முடியாது, ஆதிசேசன் கேசனை சுற்றி அரண் கட்டட்டும், விஷ்ணுவே அதன் மேல் சயனிப்பாய் என்றார். விஷ்ணு அப்படியே செய்தார். கேசி ஆதி சேசனை அழிக்க கங்கையை தியானித்து இரண்டு நதிகளாக வந்தாள். ஆனால் அறிதுயில் பெருமாளின் அருளால் அந்த ஆறுகள் கோதையாறும், பரளியாறும் ஆகின என்கிறது தலப்புராணம். இக்கோயில் தொடர்பான ஹாதலேய மகரிஷியை குறிக்கும் ஒரு கதை உண்டு. சோமயானி முனிவரின் மகன் ஹாதலேயர். அவர் ஆதி கேசவனின் அருளால் அஷ்டாங்க மந்திர உபதேசம் பெற்று ரிஷி ஆனார். ஆதிகேசவன் அருகேயே இருக்க வரம் கேட்டிருந்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு என்ற நூல் திருவட்டாறு ஊரை குறிப்பிடுகிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் நெஞ்சாலையில் உள்ளது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் திருத்தலம். நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.

Related Stories: