மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்…

இந்தி ‘அந்தாதுன்’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இந்தியிலும், தமிழிலும் கொடுத்துள்ள முழுநீள கிரைம் திரில்லர் படம் இது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் துபாயில் இருந்து மும்பைக்கு வரும் ஆர்க்கிடெக்ட் ஆல்பர்ட் என்கிற விஜய் சேதுபதி, ஓட்டலில் தனது வாய் பேசாத மகள் ஆன்னி என்கிற பரி மகேஸ்வரி ஷர்மாவுடன் சாப்பிடும் மரியா என்கிற கத்ரீனா கைஃப்பை சந்திக்கிறார். அப்போது கத்ரீனா கைஃப்பை விட்டு ஓடிவிடுகிறார், காதல் கணவர் ஜெரோம்.

இதனால் ஒரு துணை தேடும் கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதியை வீட்டுக்கு அழைத்து வந்து பொழுதுபோக்குகிறார். வீட்டுக்கு கீழே பேக்கரி நடத்துவதாகவும், ஜெரோமுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சொல்லும் அவர், விஜய் சேதுபதிக்கு மது அருந்தும் வாய்ப்பை வழங்குகிறார். பிறகு இருவரும் நடனமாடி ரசாயன மாற்றம் நடந்து முத்தமிட்டுக் கொள்கின்றனர். அப்போது திடீரென்று விலகும் கத்ரீனா கைஃப், பிறகு விஜய் சேதுபதியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தால், அவரது கணவன் ஜெரோம் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கிறான்.

இது கொலையா, தற்கொலையா என்று தெரியாத நிலையில், போலீசுக்கு போன் செய்ய விஜய் சேதுபதி முயற்சிக்கிறார். அடுத்த நிமிடம் பின்வாங்கி, ‘நான் இங்கே இருந்தால் போலீசுக்கு சந்தேகம் வரும்’ என்று சொல்லி நழுவுகிறார். அப்போது அவர், தன்னுடன் கள்ளக்காதலில் இருந்த ராதிகா ஆப்தேவை கொலை செய்துவிட்டு, சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்ததாக சொல்கிறார். இதனால் உஷாரான கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதியை அங்கிருந்து வெளியேறும்படி கத்துகிறார்.

இந்நிலையில், பெண்களிடம் அசடு வழிந்து உஷார் செய்யும் கவின் பாபுவும் கத்ரீனா கைஃப் வீட்டுக்கு வர, அங்கு விஜய் சேதுபதியும் இருக்கிறார். விஜய் சேதுபதியைக் கண்டுகொள்ளாத கத்ரீனா கைஃப், இதற்கு முன்பு விஜய் சேதுபதிக்கு மது அருந்த வாய்ப்பு கொடுத்தது போல் கவின் பாபுவுக்கும் கொடுக்கிறார். மீண்டும் ஜெரோமின் இறந்த உடல் வீட்டில் இருக்க, அதைப் பார்த்து கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி, கவின் பாபு அதிர்ச்சி அடைகின்றனர். போலீசுக்கு தகவல் கிடைத்ததும் விசாரணை நடத்துகின்றனர். இன்ஸ்பெக்டர் சண்முகராஜனும், ஹெட் கான்ஸ்டபிள் ராதிகாவும் கொலையாளியைக் கண்டுபிடித்தார்களா? கத்ரீனா கைஃப் வாழ்க்கையில் நடந்தது என்ன என்பது கிளைமாக்ஸ்.

முழு படத்தையும் தாங்கி நிற்கும் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஜோடியின் கெமிஸ்ட்ரி அபாரம். முத்தக்காட்சி இதயத்தைப் படபடக்க வைக்கிறது. முற்பகுதியில் விஜய் சேதுபதியின் நடிப்பும், பிற்பகுதியில் போலீஸ் வளையத்துக்குள் சிக்கிய கத்ரீனா கைஃப்பின் நடிப்பும் போட்டி போட்டுள்ளன. விசாரணை நடத்தும் ராதிகா, சண்முகராஜன் கூட்டணியின் இயல்பான வசனங்கள், படத்தின் விறுவிறுப்புக்கு உதவியுள்ளன. ராஜேஷ், ராதிகா ஆப்தே, காயத்ரி சங்கரின் நடிப்பு நிறைவு. போலீஸ் ஸ்டேஷனில் கவின் பாபுவின் மனைவி அஸ்வினி கால்சேகரின் பேச்சும், நடிப்பும் கலகலக்க வைக்கிறது.

கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் கதையை வித்தியாசமான டோனில் கொடுத்து, கண்ணிமைக்க விடாமல் செய்கிறது மது நீலகண்டனின் கேமரா. பாடல்களுக்கான இசையில் பிரீத்தம், பின்னணி இசையில் டேனியல் பி.ராஜ் ஆகியோரின் பங்கு சிறப்பு. ஜெரோமைக் கொன்றது யார் என்று யூகிக்க முடியாதபடி காட்சிகளையும், வசனங்களையும் அமைத்த இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் பாராட்டுக்குரியவர். மெதுவாக நகரும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள் இருந்தாலும், கிளைமாக்ஸ் ரசிகர்களை இருக்கையின் நுனியில் கட்டிப்போடுகிறது.

The post மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்… appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: