சர்ச்சைக்குரிய கீர்த்தி சுரேஷ் பட டிரைலர்

சென்னை: ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், ‘ரகு தாத்தா’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கேஜிஎஃப்’ முதல் பாகம் மற்றும் 2ம் பாகம், ‘காந்தாரா’ முதல் பாகம் உள்பட பல படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ், தற்போது நேரடியாக தமிழில் தயாரித்துள்ள படம், ‘ரகு தாத்தா’. அதிக வரவேற்பை பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ என்ற வெப்தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் நடித்துள்ளனர். ஒய்.யாமினி ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது, இந்தி திணிப்பு விவகாரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் இந்தியில் கூறப்படும் வார்த்தையை புரிந்துகொண்டு பலரும் அதன்படி செயல்பட, கீர்த்தி சுரேஷ் மட்டும் ‘தமிழ்ல சொல்லுங்க சார்’ என்று உறுதியாக நிற்கிறார்.

அடுத்தடுத்த காட்சிகளில் இந்தி திணிப்பு குறித்து வலுவாக எதிர்க்கப்படுகிறது. ‘இந்தி எக்ஸாம் எழுதுனாதான் எனக்கு புரமோஷன் கிடைக்குமா? அப்டின்னா, எனக்கு புரமோஷனே வேணாம்’ என்ற வசனமும், ‘இந்தியை திணிக்காதே’ என்ற முழக்கமும், ‘இதையெல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால், இந்தி தெரியாது போயா’ என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அழுத்தமான அரசியலை இப்படம் பதிவு செய்கிறது என்பது புரிகிறது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

The post சர்ச்சைக்குரிய கீர்த்தி சுரேஷ் பட டிரைலர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: