தி மார்வெல்ஸ் – திரை விமர்சனம்

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ், மற்றும் மோஷன் பிக்சர்ஸ் வெளியீட்டில் நியா டகோஸ்டா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் பட பட்டியலில் அடுத்த வரவு தி மார்வெல்ஸ்’ . பிரி லார்சன், தியோனா பாரீஸ் , இமான் வெல்லானி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூப்பர் ஹீரோயின்கள் அடிப்படையிலான மார்வெல் திரைப்படம்.

சுப்ரீம் இன்டலிஜென்ஸ் குழப்பத்தால் ஹாலா உலகில் காற்று, நீர் ,சூரிய ஒளி என அனைத்தும் நீங்கி இருள் சூழ்ந்த உலகமாக மாறி நிற்கிறது. ஹாலாவின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் டார் – பென் தனது உயிரையே பணயம் வைத்து தனது உலகத்திற்கான வாழ்வை கொண்டுவர முயற்சி செய்கிறார். அந்த முயற்சிக்கு உதவியாக குவாண்டம் பேண்ட் இருக்கிறது. அதில் ஒரு பகுதி டார் பென்னிடமும், மற்றொரு பாதி பூமியில் இருக்கும் மிஸ் மார்வெல் கமலா கானிடமும் இருக்கிறது. முழுமையாக ஹாலா உலகத்திற்கு அத்தனை வசதியையும் கொண்டு வர இரண்டு பேண்டுகளும் ஒன்று சேர வேண்டும். அப்படிச் செய்தால் மொத்த அண்டத்திலும் பிளவு உண்டாகி, போர் மூளும்.

இதன் ஒரு கட்டமாக ஒளி அடிப்படையிலான சக்திகள் கொண்ட
கேப்டன் மார்வெல் ( பிரி லார்சன் ) , மிஸ் மார்வெல் ( இமான் வெல்லாணி) , மோனிகா ரெம்பியூ ( தியோனா பாரீஸ் ) மூவரின் சக்திகளும் அவர்களை இடத்திற்கு இடம் மாற்றுகின்றன. இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு பென்னால் மொத்த அண்டத்திற்கும் ஏற்படவிருக்கும் ஆபத்து சரி செய்யப்பட்டு போர் நிறுத்தப்பட்டதா இல்லையா என்பது மீதிக் கதை.

இயக்குநர் நியா டகோஸ்டா… சூப்பர் ஹீரோக்கள் என்றாலே ஆண்கள் மட்டும் தானா முழுமையான பெண்களுக்கான படமாக இருக்கக் கூடாதா என்னும் நோக்கத்திலேயே இந்த மார்வெல் படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் ஹீரோயின்கள் வில்லி என அத்தனையும் பெண்கள் மயமாக இருக்கிறது.

எதையுமே சீரியஸாக பார்க்கும் பிரி லார்சன், அனைத்திற்கும் தீர்வு காண துடிக்கும் பாரிஸ், எதைப் பார்த்தாலும் ஆச்சரியப்பட்டு குதிக்கும் இமான் என இம்மூன்று பெண்களும் படத்தின் மூன்று தூண்களாக ஆக்ஷன் அதிரடி என மாஸ் காட்டுகிறார்கள்.

ஷான் போபித் ஒளிப்பதிவில் விண்வெளியில் நடக்கும் சண்டை காட்சிகளும் மூன்று ஹீரோயின்களின் ஜம்பிங் மொமண்ட்களும் கண்களுக்கு விருந்தாக அமைக்கப்பட்டிருக்கின்றன. படத்திற்கு இசையும் லாரா கர்ப்மன் என்னும் பெண் தான் , பிரம்மாண்ட காட்சிகளின் அனுபவத்தை தனது இசையால் மேலும் மெருகேற்றி கொடுத்திருக்கிறார்.

காட்பாதராக சாமுவேல் ஜாக்சன் , ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து கொண்டு இம் மூன்று பெண்களையும் அண்டத்தையும் பாதுகாக்க பலவாறு போராடும் கேரக்டரில் படத்தின் அதிக பொறுப்புகள் நிறைந்த கதாபாத்திரம் இதுதான் என்பது போல் தோற்றம் கொடுக்க வைத்தது அவரது நடிப்பிற்கே உண்டான பிளஸ். கமலா கானின் குடும்பம், ஆக்டோபஸ் பூனைகள், அண்ட வெளியில் பறக்கும் ஸ்பேஸ் ஷிப்கள் என மார்வெல் படத்திற்கே உரிய அத்தனை சிறப்பு அம்சங்களும் இந்த படத்தில் இருக்கின்றன. ஆனால் அத்தனை படங்களிலுமே இது மட்டுமே இருப்பதால் ஒரு சில இடங்களில் இன்னும் ஏதாவது சிறப்பாக இருந்திருக்கலாம் என்னும் நினைப்பும் வருவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் இரண்டு எண்ட் கிரெடிட்கள் தி மார்வெல்ஸ் படத்திற்கு அடுத்த பாகம் இருப்பதை உறுதி செய்கிறது. இந்தப் படத்தைக் காண குறைந்த பட்சம் மிஸ் மார்வெல் சீரீஸ் ஆவது பார்த்திருப்பது அவசியம்.

எத்தனை சீரிஸ்கள் வந்தாலும் எத்தனை படங்கள் கொடுத்தாலும் ஆளுக்கு முதலில் டிக்கெட் எடுத்து காத்திருப்போம் என்னும் மார்வெல் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் தீபாவளி பரிசாகவே இருக்கும்.

The post தி மார்வெல்ஸ் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: