பம்பாய் மெரி ஜான் (இந்தி)

கே.கே.மேனன், அவினாஷ் திவாரி நடிப்பில் வெளியாகியுள்ள கேங்ஸ்டர் வெப்தொடர் இது. 1965 மற்றும் 1977 காலக்கட்டங்களில் கதை நடக்கிறது. இன்றைய காலத்தில் மும்பை அண்டர்வேர்ல்ட் உலகின் ராஜாவாக இருப்பவர் ஹாஜி பாய் (சருப்சச் தேவா), அசீம் படான் (நவாப் ஷா). இவர்களின் கொட்டத்தை அடக்க வருகிறார், இளம் போலீஸ் அதிகாரி இஸ்மாயில் காதரி (கே.கே.மேனன்). ஆனால், வில்லன்களின் ஆதிக்கம், அதிகாரம் ஆகியவற்றுக்கு முன்னால் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

ஒருகட்டத்தில் அவர்கள் கூட்டத்திலேயே சேர்ந்துவிடுகிறார். இஸ்மாயில் மகன் தாரா காதரி (அஸ்வின் திவாரி) மெல்ல மெல்ல வளர்ந்து ஹாஜி பாய்க்கும், அசீம் படானுக்கும் எதிராக நிற்கிறார். 1965களில் போலீஸ் அதிகாரி இஸ்மாயில் காதரி வில்லன்களிடம் தோற்றுவிட்டார். 1977களில் அதே வில்லன்களை, அவர்களை விட கொடூரமான வில்லனாக மாறி இஸ்மாயில் மகன் எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை.ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம் கொண்டதாக, மொத்தம் 10 எபிசோடுகளாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு எபிசோடும் ஒரு திரைப்படத்துக்கு சமமாக இருக்கிறது. வன்மம், வெறி, ரத்தம், துரோகம் என்று தொடர் முழுவதும் இருண்ட உலகையே சுற்றி வருகிறது. தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அமைரா தஸ்தூர், அவினேஷ் திவாரியின் காதலியாக நடித்துள்ளார். இஸ்மாயில் மகள் ஹபிபாவின் (கிருத்திகா கமரா) கேரக்டரை முன்னிலைப்படுத்தி அடுத்த சீசனுக்கு லீட் கொடுத்துள்ளார், இயக்குனர் உசைன் சைடி. அனைவரும் தங்கள் கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளனர்.

அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், அதைக் காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. அதிக ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளும், அடல்ட் கன்டென்ட் காட்சிகளும் இருப்பதால் குடும்பத்துடன் பார்க்க முடியாது. எனினும், கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இது செம விருந்து.

The post பம்பாய் மெரி ஜான் (இந்தி) appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: