டாஸ்மாக் கடைகளில் ரசீது கட்டாயம்: மேலாண்மை இயக்குனர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உயர் ரக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பில் புக், தின ரசீது, இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு, 90 நாட்களுக்கு மேற்பட்டு இருப்பு உள்ள மதுபானங்கள், பார் பதிவேடு, வருகைபதிவேடு, ஆய்வு பதிவேடு உள்ளிட்ட 21 வகையான பதிவேடுகளை முறையாக பராமரிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கிடங்குகளிலிருந்து உயர் ரக மதுபானக் கடைகளுக்கு 750 மிலி அல்லது 1000 மிலி அளவிலுள்ள உயர் ரக மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட வேண்டும். மாறாக 375 மிலி அளவு கொண்ட நடுத்தர வகை உயர் ரக மதுபான ரகங்களும் அனுப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும். விற்பனையாகும் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கான ரசீது கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும்படி இருப்பு பட்டியலுடன் ஒவ்வொரு கடையிலும் கட்டாயம் வைக்கப்பட வேண்டும். 90 நாட்களுக்கு மேற்பட்ட மதுபானங்கள் இருப்பில் வைக்ககூடாது. மதுபானங்களின் விற்பனையை அதிக அளவில் பிஓஎஸ் இயந்திரம் மூலம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஓஎஸ் இயந்திரம் மூலம் பெறப்படுகின்ற ஒப்புகை சீட்டின் பின்புறம் விற்கப்படுகின்ற மதுபானங்களின் பெயர் தேதி, அரசு நிர்ணயித்த விலை மற்றும் கடை பணியாளர்களின் கையொப்பம் இருத்தல் வேண்டும். இந்த அறிவுரைகள் அனைத்து மதுபான கடைகளிலும் முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்று முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், மண்டல அளவிலான சிறப்பு பறக்கும் படை துணை ஆட்சியர்கள் தவறாமல் கண்காணிக்க வேண்டும். அறிவுரைகளை மீறும் கடை பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களால் எடுக்கப்பட வேண்டும். இதனை கண்காணிக்க தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post டாஸ்மாக் கடைகளில் ரசீது கட்டாயம்: மேலாண்மை இயக்குனர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: