ஹரீஷ் கல்யாணுக்கு ரகசியம் சொன்ன தோனி

கிரிக்கெட் வீரர் தோனி, அவரது மனைவி சாக்‌ஷி தயாரித்துள்ள படம், ‘எல்ஜிஎம்’ என்கிற ‘லெட்ஸ் கெட் மேரீட்’. ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இசை அமைத்து இயக்கியுள்ளார். படம் குறித்து ஹரீஷ் கல்யாண் கூறுகையில், ‘சாக்‌ஷி தோனி எழுதிய கதை வித்தியாசமாக இருக்கும். அனைத்து ரசிகர்களும் தங்களுடன் இணைத்துக்கொள்வார்கள். இக்கதை உலகிலுள்ள பொதுவான பிரச்னையைப் பேசுகிறது. ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் நதியாவைப் பார்த்த பிறகு என் அம்மாவிடம், நான் நதியாவை அம்மா என்று சொல்லலாமா என்று கேட்டேன். அந்தளவு எனக்கு அவரைப் பிடிக்கும். இப்போது அவருடன் நடித்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இப்படத்தில் காமெடி, காதல், சென்டிமெண்ட் காட்சிகளை தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. உங்கள் குடும்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அது கடவுள் கொடுக்கும் அன்புப் பரிசு. அப்படி எல்லா குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் விஷயம் இப்படத்தில் இருக்கிறது. இயக்குனரிடம் நான், ‘தோனி சார் படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், தோனி தன்னிடம் சொன்ன, ‘நாம் செய்த வேலையை முதலில் நாம் நேசிக்க வேண்டும். நாம் செய்த இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்ற விஷயத்தை என்னிடம் தெரிவித்தார். அதைக்கேட்ட பிறகு சந்தோஷமாக இருந்தது. எங்களுக்குப் பிடித்த இப்படம், கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

The post ஹரீஷ் கல்யாணுக்கு ரகசியம் சொன்ன தோனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: