சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி நடிப்பில் வெளியான படம், ‘16 வயதினிலே’. இதில் பாரதிராஜாவை இயக்குனராக அறிமுகம் செய்தவர், ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு (77). தொடர்ந்து அவர் பாரதிராஜா இயக்கத்தில் சுதாகர், ராதிகா அறிமுகமான ‘கிழக்கே போகும் ரயில்’, கே.பாக்யராஜ் வில்லனாக நடித்த ‘கன்னிப்பருவத்திலே’, பாரதிராஜா இயக்கத்தில் கார்த்தி, ராதா நடித்த ‘வாலிபமே வா வா’, கே.ரங்கராஜ் இயக்கத்தில் பாண்டியன், ரேவதி நடித்த ‘பொண்ணு புடிச்சிருக்கு’, பி.வி.பாலகுரு இயக்கத்தில் கே.பாக்யராஜ், ராதா நடித்த ‘எங்க சின்னராசா’, சந்தானபாரதி இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா நடித்த ‘மகாநதி’ உள்பட 11 படங்களை தயாரித்தார்.
‘அர்த்தங்கள் ஆயிரம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். பிறகு ‘16 வயதினிலே’ படத்தை டிஜிட்டல் மூலம் புதுப்பித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு, அதை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். சென்னை குரோம்பேட்டை மின்மயானத்தில் நேற்று எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர்.
எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாரதிராஜா வெளியிட்ட பதிவில், ‘தமிழில் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றிவிட்டுச்சென்ற என் முதலாளி எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மறைவு பேரதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்த அவர், எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
The post 16 வயதினிலே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு உடல் தகனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.