தே.ஜ.கூட்டணியில் தான் அமமுக இருக்கிறது: அசிங்கப்பட்டாலும் வலிக்காமல் பேசும் டிடிவி.தினகரன்

திருச்சி: திருச்சி திருவானைக்காவலில் ரங்கம் சட்டமன்ற தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் மூன்றாவது, நான்காவது அணி அமைய வாய்ப்புள்ளதாக தான் கூறினேன். அமையும் என கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்த பின்பு அமமுக இருப்புக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை யார் என்பது குறித்து அமித்ஷா என்ன பதில் கூறினாரோ அது தான் எனது பதிலும். அமித்ஷாவின் முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். அதிமுக தலைமைக்கும், எங்களுக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்து விட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். டிசம்பரில் எல்லா கூட்டணிகளும் உருப்பெற்று விடும். எங்கள் கட்சியில் தகுதியுள்ள நபர்கள் அனைவரும் நிச்சயம் போட்டியிடுவர். தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கு கல்விநிதி ஒதுக்காத விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறும் டிடிவி.தினகரனை, அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி தொடர்ந்து சந்திக்க மறுத்து வருகின்றனர். இதேபோல், கூட்டணியில் இருப்பதாக கூறி வந்த ஓபிஎஸ்சை, அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததால் ஒன்றிய அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக-பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாகவும், புது பயணம் குறித்தும் முக்கிய அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட உள்ளார். ஆனால் எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் இந்த கூட்டணியில்தான் தொடர்வேன் என்று டிடிவி.தினகரன் பேட்டி மூலம் நிரூபித்து உள்ளார்.

The post தே.ஜ.கூட்டணியில் தான் அமமுக இருக்கிறது: அசிங்கப்பட்டாலும் வலிக்காமல் பேசும் டிடிவி.தினகரன் appeared first on Dinakaran.

Related Stories: