கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

மதுரை, ஜூலை 29: பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்று தீர்வு காணும் வகையில், குறைதீர் கூட்டம் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதன்படி நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு கலெக்டர் பிரவின்குமார் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மதுரையை அடுத்த தட்டாங்குளம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், தரப்பில் அளிக்கப்பட்ட மனு: நரசிங்கம் ஊராட்சி தட்டாங்குளம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 37 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி வசித்து வருகிறோம். இந்த வீடுகளுக்கு, நரசிங்கம் ஊராட்சிக்கு வீட்டுவரி செலுத்தப்படுகிறது. மேலும், 2000ம் ஆண்டில் 20 வீடுகளுக்கு அரசு சார்பில் அனுமந்த பட்டா வழங்கப்பட்டது.

அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்புப் பெற்று, முறையாக கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், 2022ம் ஆண்டில் இந்த 37 குடும்பங்களையும் அங்கிருந்து காலி செய்யும்படி மாவட்ட நிர்வாகம் தரப்பில் குறிப்பாணை அளிக்கப்பட்டது. பிறகு, அந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்தக் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அச்சுறுத்தல் வாய்மொழியாக தொடர்கிறது. இதனால், இப்பகுதி மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுகிறது. அரசு பயன்பாட்டுக்குத் தேவைப்படாத புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கலாம் என வருவாய்த் துறை மூலம் 2000ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தட்டாங்குளம் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை நத்தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்து, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: