மதுரை: மதுரை நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, உத்தங்குடி முதல் கப்பலூர் வரை ரூ.213 கோடியில் நான்கு வழிச்சாலையுடன் கூடிய மதுரை சுற்றுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை – சிவகங்கை, மதுரை – மேலூர் சாலையை இணைக்கும் இச்சாலை, தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் வண்டியூர், சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய மூன்று இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிறுவனம் சுங்க கட்டணம் வசூலிப்பு வாயிலாக சாலையை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இதன்படி ரூ.55 கோடியில் சாலையை சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதனுடன், 27 கி.மீ. தூரமுள்ள சாலையில் 19 மற்றும் 20வது கி.மீ.க்கு இடைபட்ட பகுதியில் பறம்புபட்டி அருகே இருபுறமும் உள்ள ஆபத்தான வளைவுகளால் விபத்துக்கள் நடப்பதால், அவற்றையும் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
