புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்: சனவேலி மக்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், டிச.18: ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சனவேலி கிராமமானது திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த ஊர் கிட்டதட்ட ஒரு குட்டி டவுன் போன்றது. எனவே சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களான சனவேலி, கண்ணுகுடி, கவ்வூர், காவனக்கோட்டை, ஏ.ஆர்.மங்கலம், கொன்னக்குடி, பகவதி மங்கலம், குளநாத்தி, கள்ளிக்குடி, விளத்தூர், நடியக்குடி, குமரன் காளி,ஒடைக்கால், குலமாணிக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்.எஸ். மங்கலம், ராமநாதபுரம், திருச்சி, திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு எங்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சனவேலி பஸ் நிறுத்தத்தையே பயன்படுத்துகின்றனர்.

இங்கு சரியான நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் சுட்டரிக்கும் கோடை வெயிலில் நின்று அவதிப்பட வேண்டிய சூழல் உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு புதிய நிழற்குடையை கட்டி தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் எங்களது கிராமங்களில் இருந்து எந்த ஒரு அத்தியாவசிய பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும் டவுன் பகுதிகளான ஆர்.எஸ்.மங்கலமோ அல்லது திருவாடானை தான் போக வேண்டும்.

இந்த சூழ்நிலையில் இப்பேருந்து நிறுத்தத்தில் சரியான நிழற்குடை இல்லாததால், வயதானவர்களும் குழந்தைகளும் கோடை வெயிலில் மிகவும் சிரமப்படும் நிலைதான் இருக்கின்றது. இதனால் மிகவும் கஷ்டமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்களுக்கு பேருந்து நிறுத்தத்தில் புதிதாக ஒரு நிழற்குடை கட்டித் தந்து எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்கின்றனர்.

Related Stories: