மதுரை, டிச. 18: மதுரையின் வைகை வடகரையில், குருவிக்காரன் சாலை சந்திப்பிலிருந்து விடுபட்டுள்ள பகுதியை இணைப்பு பண நடைபெற உள்ளது. இதற்காக மரங்களை அகற்றுவது தொடர்பாக வருவாய்த்துறை தரப்பில் ஆய்வு நடந்தது. மதுரை மாவட்டத்தின் பழைய எல்லைகளாக கிழக்கு பகுதியில் ரிங்ரோடும், மேற்கு பக்கத்தில் வாரணாசி -கன்னியாகுமரி பழைய பைபாஸ் சாலையும் இருந்தது. இந்நிலையில், இவற்றை இணைக்கும் விதமாக வைகை ஆற்றின் வடக்கு மற்றும் தென்கரைகளில் ரூ.381.41 கோடியில் ஏற்கனவே தமிழக நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலகு மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளன. இதில், குருவிக்காரன் சாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணாநகர் தெப்பக்குளம் இணைப்பு பாலம் வரை, சாலை அமைக்காமல் விடுபட்டுள்ளது.
இந்த சாலை பகுதியை புதிதாய் அமைக்க, நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பாக, 6,000 சதுர அடி அளவிற்கு நிலம் கையப்படுத்தபட்டது. இதற்காக, ரூ.26 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்தகட்டமாக விடுபட்ட சாலையை இணைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சாலை பணிகள் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் ஆய்வு நடைபெற்றது.
இதுகுறித்து, வடக்கு தாலுகாவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ராமர் கூறும்போது, ‘‘திட்டப்படி சாலை அமைக்கப்பட வேண்டிய பகுதியில் தற்போதுள்ள மரங்களை அகற்ற வேண்டும். சுமார், 20க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற வேண்டியுள்ளதால் இதற்காக நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்ததாக, முதற்கட்ட ஆய்வு பணிகள் முடிந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை தரப்பில் மரங்களை அகற்றுவது மற்றும் மறுநடவுக்கான இழப்பீடு குறித்த அறிக்கை கிடைத்தபிறகு, அடுத்தகட்ட பணிகள் தொடங்கும்’’ என்றார்.
