நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருத்திக்கு உரிய காப்பீடுதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகப்பட்டினம், டிச.18: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருத்திக்கு உரிய காப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் காப்பீடு நிறுவனத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2024- 2025ம் ஆண்டில் 6 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. பருவம் தவறிய மழையால் சாகுபடி செய்த பருத்தி பாதிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் 3 முறை தான் பருத்தி அறுவடை செய்வார்கள். திருவாரூர் போன்ற பிற மாவட்டங்களில் விவசாயிகள் 5 முறை பருத்தி அறுவடை செய்வார்கள்.

இதனால் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருத்திக்கு பிறகு விவசாயிகள் நேரடியாக சம்பா நெற்பயிர் சாகுபடிக்கு மாறி விடுவார்கள். இந்நிலையில் 2024 -25ம் ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட பருத்தி 100 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டதால் ரூ.19 ஆயிரத்து 600 வழங்க வேண்டும். ஆனால் இதுவரை இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே உரிய இழப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: விவசாய சாகுபடி வயல்களுக்கு காப்பீடு செய்வதாக கூறி, கேஸ்மா என்ற நிறுவனம் இதுவரை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பருத்திக்கான காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.

இது குறித்து விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டத்திற்கு 50 சதவீதமும், நாகப்பட்டினத்திற்கு 25 சதவீதமும் வழங்கப்போவதாக தகவல்கள் தெரிகிறது. இதுபோல் பாரபட்சமாக காப்பீடு வழங்கும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அந்த நிறுவனத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். காப்பீட்டு நிறுவனம் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் ஒருதலை பட்சமாக அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிராக அந்நிறுவனம் செயல்பட்டால் கடுமையான போராட்டங்கள் மூலம் அவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருத்தி காப்பீட்டு தொகையை எந்தவித பாகுபாடின்றி உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: