வேலாயுதம்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலாயுதம்பாளையம், டிச.18: வேலாயுதம்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கரூர் மாவட்டம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறை அருகே செல்லும் மேம்பாலத்தை ஒட்டிச் செல்லும் சர்வீஸ் சாலையின் அருகே கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து குடியிருந்து வருகின்றனர். அதேபோல் அந்த பகுதியில் இரு ரைஸ் மில்களும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வீஸ் சாலை அருகே பூர்த்தி செய்யப்படாமல் உள்ள பகுதியில் சர்வீஸ் சாலை அருகில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த வீடுகள் ரைஸ்மில்கள் முன் போடப்பட்டிருந்த முகப்புகளை அகற்றுவதற்காக சர்வேயர்கள் மூலம் அளந்து ஆக்கிரமிப்பு பகுதியில் எல்கை போட்டிருந்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சசிகுமார் தலைமையிலான குழுவினர் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த வீடுகளின் முன்பு போடப்பட்டிருந்த செட்டுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் பிரச்சனை நீடித்தது. சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளும் போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரத்திற்கு பிறகு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் வீட்டின் முன் போடப்பட்டிருந்த இரும்பு தகர கொட்டகைகள் அகற்றப்பட்டது. அசம்பாவித சம்பவத்தை தவிர்க்கும் வகையில் வேலாயம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: