விருதுநகர், டிச. 18: விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் சுகபுத்ரா அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், வட்டாட்சியர், ஆணையாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு கடந்த நவ.4 முதல் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்றது. அதன்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிச.19 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதை தொடர்ந்து, சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இந்நிகழ்வில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
