100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் கிடைக்காதபோதும் மரங்களை காப்பாற்ற போராடும் மதவக்குறிச்சி பெண்கள்

*தொலை தூரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து வரும் அவலம்

நெல்லை : ஒன்றிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் கிடைக்காத நிலையிலும், நெல்லை அருகே மதவக்குறிச்சி பகுதி பெண்கள் மரங்களை காப்பாற்றிட தொலை தூரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து வந்து ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005 என்பது அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு கிராம மக்களின் பொருளாதாரம் பேண உருவாக்கப்பட்டது.

அப்போதைய ஒன்றிய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

இது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் செழுமையை உருவாக்குதல், நீர் மேலாண்மை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளையும் உள்ளடக்கியது.

இத்திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கடந்த 10 ஆண்டுகளாக சிதைப்பதற்கு உரிய வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் நெல்லை மாவட்டம் மானூர் அருகே மதவக்குறிச்சி பகுதி பெண்கள் இத்திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை அர்ப்பணிப்பு உணர்வோடு இன்றுவரை பராமரித்து வருகின்றனர்.

கடந்த 4 மாதங்களாக நூறு நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு ஊதியம் கிடைக்காத நிலையிலும், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்க தினமும் தொலை தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி, ஊரை செழிப்பாக்கிட தங்களால் முயன்ற உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது வெறும் வேலை மட்டுமல்ல, அது பசுமையை காக்கும் அர்ப்பணிப்பு என செயல்பாட்டோடு அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘‘மரத்த வைச்சவன் தண்ணீ ஊத்துவான் என கிராமங்களில் ஒரு சொலவடை அக்காலங்களில் உண்டு. ஆனால் இப்போது நாம் மரத்தை வைத்தால், நாம்தான் தண்ணீர் ஊற்றியாக வேண்டும். மானூர் பகுதியே பல ஆண்டுகளாக வறட்சி பகுதியாக உள்ளது.

எனவே அதை மாற்ற வேண்டுமானால் மரங்களின் பங்களிப்பு அவசியம். அதற்காக மதவக்குறிச்சியில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டோம். எங்களுக்கு ஊதியம் வராதபோது, தொடர்ந்து அவற்றை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோம்.

கிராமங்களில் தண்ணீரை தேடி கூட வெகு தொலைவு செல்ல வேண்டியதுள்ளது. எங்களுக்குச் சம்பளம் வந்தாலும் வராவிட்டாலும், இந்த மரங்கள் நன்றாக வளர வேண்டும். அடுத்த தலைமுறை இந்த மரங்களால் நல்ல முறையில் பயன் அடையும்’’ என்றனர்.

இந்நிலையில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பணிகளை கண்ட மானூர் வட்டார அதிகாரிகள், அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

தாமதமான ஊதியம், அவர்கள் பணிகளை முடக்கும் என்பதால், நூறு நாள் வேலைத்திட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை விரைந்து வழங்கிட வேண்டும் என மானூர் வட்டார சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாலையோர பகுதிகளில் போர் போட்டு, அவர்களுக்கு தண்ணீர் சிரமமின்றி கிடைக்க வழிவகை செய்தால், வெகுதூரம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

The post 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் கிடைக்காதபோதும் மரங்களை காப்பாற்ற போராடும் மதவக்குறிச்சி பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: