சென்னை: வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்று கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்த சோமசுந்தரம் என்பவர், ஒன்றிய அரசின் ஸ்வதந்திர சைனிக் சம்மான் எனும் தியாகிகள் பென்ஷன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மனுவில், தமிழக அரசின் தியாகிகள் பென்ஷன் பெறுவதால், ஒன்றிய அரசின் பென்ஷன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து சோமசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்த போது அவர் இறந்து விட்டதால், வழக்கை அவரது வாரிசான ருக்மணி தொடர்ந்து நடத்தினார்.
வழக்கை விசாரித்த தனிநீதிபதி, மாநில அரசு தியாகிகள் பென்ஷன் வழங்குவதால், நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அவசியமில்லை எனக் கூறி சோமசுந்தரத்துக்கு ஒன்றிய அரசின் தியாகிகள் பென்ஷன் வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஒன்றிய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றிய அரசின் திட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், சோமசுந்தரத்துக்கு பென்ஷன் வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஒன்றிய அரசு திட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் பென்ஷன் பெற தகுதி உள்ளது என்று உத்தரவிட்டனர்.
