மதுரை: விருதுநகரை சேர்ந்த கருப்பசாமிபாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, அவர்ளின் பாதுகாப்பிற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற பெண் நீதிபதி அடங்கிய நிரந்தர குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் உயரதிகாரிகள், பெண் வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்களையும் இடம் பெற செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி , பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், பணி புரியும் இடத்தில் பெண்களுக்கான பிரச்னைகள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் தலைவர் மற்றும் 7 உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கணிசமான அளவில் உறுதி செய்யப்பட்டு உள்ளது என வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் செயல்பாட்டு வழிமுறைகள் தெளிவாக உள்ளன.
இதனை பள்ளிகள் மற்றும் பிற இடங்களிலும் குழந்தைகளை பாதுகாக்க பயன்படுத்தலாம். எனவே, பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பை முன்னெடுத்துச் செல்வதில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவதில் அனைத்து தரப்பினருடன் இணைந்து கண்காணிக்குமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறோம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
