ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது: இன்று மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 449 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. மாலையில் தனுஷ்கோடி அருகே விசைப்படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து இலங்கை கடலோர காவல்படை மற்றும் கடற்படை ரோந்து படகில் வந்த கடற்படை வீரர்கள், ராமேஸ்வரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வேறு பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இரவில் மீண்டும் 5 சிறிய ரக படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதில் ஜோதிபாஸ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் பிரபாத்(28), சந்தியா நிவாஸ்டன்(33), ஜேம்ஸ் கேயிடன்(23), கயூஸ்ராஜ்(44), டோஜா (16), அந்தோணி டில்மன்(31), ஆக்போ நிஜோ (17), மரிம ஆண்டோ பெஸ்டன்(19), கோர்பசேவ்(37), மதன்சன்(32), நிமல் சகாயம்(31), ஆனந்த்(20) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இலங்கை கடற்படையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் டிச.26ல் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

* குடும்பத்தினர் திடீர் மறியல்: சாலையில் புரண்டு கதறல்
இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதான மீனவர்களின் குடும்பத்தினர் சாலையில் புரண்டு கதறி அழுதனர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டவர்களிடம் ராமேஸ்வரம் ஏஎஸ்பி மீரா பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

Related Stories: