திருச்செந்தூர்: நமது இளைஞர்கள், குழந்தைகள் 41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின் செல்வது ஏன்? என திருச்செந்தூர் அருகே நடந்த விழாவில் நெல்லை கல்லூரி முதல்வர் பாதிரியார் காட்வின் ரூபஸ் பேசிய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் ஆலய திருவிழா கடந்த டிச. 12ம் தேதி தொடங்கி நடந்தது. இதன் நிறைவு விழாவையொட்டி ஆலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் பாதிரியார் காட்வின் ரூபஸ் பங்கேற்று மறையுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில் ‘‘அஸ்ட்ரோ பிசிக்ஸ் படிக்க வேண்டும் என குட்டி பையன் சொல்கிறான். ஆனால் நமது பிள்ளைகளிடம் கேட்டுப் பார்த்தால் விஜய் ரசிகனாக போகிறேன் என்கின்றனர்.
41 பேரை கொன்று குவித்தவருக்கு பின்னால், நான் ஏற்கனவே கைகளில் விலங்கு போட்டிருக்கேன் என்பது போல காட்டும் தலைவர் பின்னால் போகும் கூட்டம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. நான் விஜய்க்கு எதிரி இல்லை. ஆனால் சினிமா நடிகர்கள் பின்னால் நமது இளைஞர்கள், குழந்தைகள், ஏன் போய் கொண்டிருக்கிறார்கள். கேள்விகளை கேட்க வேண்டும். பாரம்பரியம் இன்றோடு, நேற்றோடு முடிவதில்லை. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்’’ என்றார். விஜய்க்கு எதிராக கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பரவி வருகிறது.
