கிருஷ்ணகிரி : பர்கூர், கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 110 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி மேற்கொள்வதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.
பர்கூரில் குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம், எஸ்பி தங்கதுரை தலைமையில் நேற்று நடந்தது. பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் எஸ்பி தங்கதுரை பேசியதாவது:
பர்கூர், கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி – பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி – ஆந்திரா மாநிலம், சித்தூர் தேசிய நெடுஞ்சாலை என 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. திருப்பத்தூர் மாவட்ட எல்லையும் அமைந்துள்ளன.
இதனால், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் 110 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களும் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வெளியூர் செல்லும் போது, தொடர்புடைய காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். டூவீலர்களில் விலை உயர்ந்த பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
வீடுகளை வாடகைக்கு விடும் போது, தொடர்புடையவர்களின் முழு விவரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். இதேபோல், இருசக்கர வாகனங்களில் பெண்கள் தனியாகவோ, குழந்தைகளுடனோ செல்லும்போது ஹெல்மெட் அணிந்தும், கழுத்தில் போட்டிருக்கும் நகைகளை துணியால் மறைத்தும் செல்ல வேண்டும்.
தங்களை யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று கவனித்துச் செல்ல வேண்டும். அவர்கள் திடீரென செல்போனையோ அல்லது நகைகளையோ பறிக்க நேரிடும். இதனால் விபத்தும் நேரிடும். கிராம புறங்களில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிபவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள், தங்கள் செல்போனில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து, அவசர உதவிக்கு அழைக்கலாம். மேலும் அவசர உதவி எண்கள் 181, 1098, 1930 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்ஐ ஆனந்தன், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பர்கூர், கந்திகுப்பம் பகுதிகளில் 110 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு appeared first on Dinakaran.