பஞ்சாப்பை பந்தாடிய சன்ரைசர்ஸ்: அபிஷேக் சர்மா மாயா ஜாலம்

ஐதராபாத்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸ் அணி 247 ரன் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 27வது லீக் போட்டி, ஐதராபாத்தில் நேற்று, பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து, அந்த அணியின் துவக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இருவரும் துவக்கம் முதல் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஹர்சல் படேல் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தை ஆடிய ஆர்யா (13 பந்து, 4 சிக்சர், 2 பவுண்டரி, 36 ரன்), நிதிஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் தந்து அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர், 66. அதையடுத்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பிரப்சிம்ரனுடன் இணை சேர்ந்தார்.

ஆனால், சிறிது நேர இடைவெளியில் இஷன் மலிங்கா வீசிய பந்தை எதிர்கொண்ட பிரப்சிம்ரன் (23 பந்து 42 ரன்), பேட் கம்மின்சிடம் கேட்ச் தந்து அவுட்டானார். பின், நேஹல் வதேரா உள்வந்தார். 8.1வது ஓவரில் பஞ்சாப் அணி, 100 ரன்னையும்,12.2 ஓவரில் 150வது ரன்னையும், தொட்டது. இந்த நிலையில், 14வது ஓவரை வீசிய மலிங்காவின் மந்திரப் பந்தில் வதேரா (27 ரன்), எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். அடுத்த ஓவரை வீசிய ஹர்சல் படேல், ஷசாங்க் சிங்கை (2 ரன்) எல்பிடபிள்யு செய்து வெளியேற்றினார்.

அதைத் தொடர்ந்து, கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கி, ஷ்ரேயாசுடன் இணை சேர்ந்தார். 16.5 ஓவரில் பஞ்சாப், 200 ரன்களை கடந்தது. ஹர்சல் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் (3 ரன்) கிளீன் போல்டானார். அதையடுத்து, மார்கஸ் ஸ்டோய்னிஸ் களமிறங்கினார். அதே ஓவரின் 3வது பந்தில் ஷ்ரேயாஸ் அடித்த பந்தை டிராவிஸ் ஹெட் அற்புதமாக பிடித்து அவரை அவுட்டாக்கினார். ஷ்ரேயாஸ் 36 பந்துகளில், 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 82 ரன் விளாசினார். பின்னர், மார்கோ ஜேன்சன், ஸ்டோய்னிசுடன் இணை சேர்ந்தார். கடைசி ஓவரில், ஸ்டோய்னிஸ் 4 சிக்சர்களை விளாசியதால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப், 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன் குவித்தது.

மார்கஸ் ஸ்டோய்னிஸ் 34 (11 பந்து), ஜேன்சன் 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் ஹர்சல் படேல் 4, இஷன் மலிங்கா 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் பஞ்சாப் அணியின் பந்துகளை துவம்சம் செய்து ரன்களை குவித்தனர். இந்த இணை முத‌ல் விக்கெட்டுக்கு 171 ரன் விளாசிய நிலையில் ஹெட் 66 ரன்னில் அவுட் ஆனார். பின் கிளாசனுடன் சேர்ந்து அபிஷேக் ரன் மழை பொழிந்தார். அவர் 55 பந்தில், 10 சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 141 ரன் குவித்து அவுட் ஆனார். 18.3 ஓவரில் சன்ரைசர்ஸ் 247 ரன் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமாக வெற்றி பெற்றது.ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

The post பஞ்சாப்பை பந்தாடிய சன்ரைசர்ஸ்: அபிஷேக் சர்மா மாயா ஜாலம் appeared first on Dinakaran.

Related Stories: