சென்னை: சென்னையில் கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 25வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், அஜிங்கிய ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய நிலையில், 4வது ஓவரை வீசிய மொயீன் அலி பந்தில், டெவோன் கான்வே (12 ரன்) எல்பிடபிள்யு முறையில் அவுட்டாகினார். அதையடுத்து, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட ராகுல் திரிபாதி, ரவீந்திராவுடன் இணை சேர்ந்தார். சில பந்துகள் கூட நீடிக்காத நிலையில், ஹர்சித் ராணா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரவீந்திரா, அஜிங்கிய ரகானேவிடம் கேட்ச் தந்து, 4 ரன்னில் வெளியேறினார். அதையடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். அவரும் நிதானமாக ரன்களை சேர்த்து சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால், 10வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர் (29 ரன்) மொயீன் அலியிடம் கேட்ச் தந்து நடையை கட்டினார். அதனால், 10 ஓவர் முடிவில் சென்னை, 3 விக்கெட் இழப்புக்கு 61 ரன் மட்டுமே சேர்த்து பரிதவித்தது. அதன் பின், சிவம் துாபே, திரிபாதியுடன் இணை சேர்ந்தார். ஆனால், அடுத்த ஓவரின் கடைசி பந்தில், திரிபாதியை (16 ரன்), சுனில் நரைன் கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். அதன் பின் வந்தோரும் சொதப்பலாக ஆடினர். அஸ்வின் (1 ரன்), ரவீந்திர ஜடேஜா (0), தீபக் ஹூடா (0), கேப்டன் தோனி (1 ரன்), நுார் அகமது (1 ரன்) எடுத்து அவுட்டாகினர்.
20 ஓவர் முடிவில் சென்னை, 9 விக்கெட் இழப்புக்கு 103 மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3, வருண் சக்வர்த்தி, ஹர்சித் ராணா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
The post ஐபிஎல் 25வது லீக் போட்டி கொல்கத்தா இமாலய வெற்றி: 103 ரன்னில் சுருண்ட சென்னை appeared first on Dinakaran.