இன்று 2 ஐபிஎல் போட்டிகள்

ஹாட்ரிக் நோக்கி லக்னோ 5வது வெற்றிக்கு குஜராத்

லக்னோ: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல், லக்னோவில் நடைபெற உள்ள 26வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -குஜராத் டைடன்ஸ் அணிகள் களம் காணுகின்றன.
* நடப்புத் தொடரில், லக்னோ அணி, இதுவரை 5 போட்டிகளில் விளையாடி டெல்லி, பஞ்சாப் அணிகளிடம் தோல்வியையும், முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத், மும்பை, நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணிகளிடம் வெற்றியையும் பெற்றுள்ளது.
* குஜராத் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியை சந்தித்தது. அடுத்து 4 போட்டிகளில் மும்பை, பெங்களூர், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்தி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது.

* இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றிருந்தாலும் லக்னோவுக்கு இது 6வது போட்டி, குஜராத்துக்கு 5வது போட்டி.
* இதுவரை இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் குஜராத் 4 போட்டிகளிலும், லக்னோ ஒரு போட்டியிலும் வென்றுள்ளன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக குஜராத் 227, லக்னோ 171 ரன் விளாசி இருக்கின்றன.

* குறைந்தபட்சமாக குஜராத் 130, லக்னோ 82 ரன் எடுத்துள்ளன.
* குஜராத் 3-1 என்ற கணக்கில் வெற்றிகளை வசப்படுத்தி உள்ளது. கூடவே ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.
* லக்னோவில் 2 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை ருசித்துள்ளன.

1,000 பவுண்டரி அடித்த அபூர்வ சிந்தாமணி
டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, 14 பந்துகளை சந்தித்து 22 ரன் எடுத்தார். இதில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும். இந்த பவுண்டரியுடன் சேர்த்து, ஐபிஎல் வரலாற்றில் 1,000 பவுண்டரிகள் விளாசிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை கோஹ்லி படைத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில், ஷிகர் தவான், 920 பவுண்டரிகளுடன் 2வது இடத்திலும், வார்னர் 768 பவுண்டரிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். நடப்புத் தொடரில், இதற்கு முந்தைய போட்டிகளின்போது, டி20 போட்டிகளில் 13,000 ரன் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் கோஹ்லி படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெத் ஓவர்களில் கெத்து தோனியே
ஐபிஎல் டி20 போட்டிகளில் டெத் ஓவர்கள் எனப்படும், 16 முதல் 20 வரையிலான ஓவர்களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி முதலிடத்தில் உள்ளார். இந்த ஓவர்களில் அவர் 182 சிக்சர்கள் விளாசி உள்ளார். இந்த சாதனைப் பட்டியலில், கெரோன் பொலார்ட் 127 சிக்சர்களுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ஏபி டிவில்லியர்ஸ் 112, ஆண்ட்ரூ ரஸ்ஸல் 93, தினேஷ் கார்த்திக் 91, ஹர்திக் பாண்ட்யா 83, ரோகித் சர்மா 79 சிக்சர்களுடன் உள்ளனர். தோனி ஐபிஎல் போட்டிகளில் மொத்தத்தில், 259 சிக்சர்களும், 369 பவுண்டரிகளும் விளாசி உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட், 137.82.

பஞ்சாப்புடன் பரபரப்பு போட்டி: ஐதராபாத்தில் இன்று இரவில் சன் ரைஸ் ஆகுமா?
* ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று இரவு ஐதராபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
* நடப்புத் தொடரில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் இதுவரை 5 போட்டிகளில் களம் கண்டு முதல் ஆட்டத்தில், முதல் சாம்பியன் ராஜஸ்தானை வீழ்த்தியது.
* எஞ்சிய 4 ஆட்டங்களில் லக்னோ, டெல்லி, கொல்கத்தா, குஜராத் அணிகளிடம் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
* பஞ்சாப் இதுவரை தான் ஆடிய 4 ஆட்டங்களில் ஒன்றில் ராஜஸ்தானிடம் மண்டியிட்டது. எஞ்சிய 3 ஆட்டங்களில் குஜராத், லக்னோ, சென்னை அணிகளிடம் வெற்றி மாலை சூடியது.

* எனவே இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஐதராபாத்துக்கு 6வது, பஞ்சாப்புக்கு 5வது போட்டியாகும்.
* ஐபிஎல்தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் மோதி இருக்கின்றன.
* அவற்றில் ஐதராபாத் 16லும், பஞ்சாப் 7 போட்டிகளிலும் வென்றுள்ளன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக ஐதராபாத் 215 , பஞ்சாப் 214 ரன் விளாசியுள்ளன.

* குறைந்தபட்சமாக பஞ்சாப் 119, ஐதராபாத் 114 ரன் எடுத்துள்ளன.
* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ஐதராபாத் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* ஐதராபாத் ராஜீவ் காந்தி அரங்கில் 9 முறை மோதியுள்ள இந்த 2 அணிகளில் ஐதராபாத் 8 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒரே ஒரு முறை (2014) பஞ்சாப் வென்றுள்ளது.
* நடப்புத் தொடரில் இவ்விரு அணிகளும் இந்த ஒரு முறை மட்டுமே மோதுகின்றன.

The post இன்று 2 ஐபிஎல் போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: