அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது: அமைச்சர் ரகுபதி தாக்கு


புதுக்கோட்டை: சாணக்கியரைவிட மிகப்பெரிய ராஜதந்திரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு முன்பு அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை மாநகராட்சி பொன்னம்பட்டியில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் ஓட்டக்குளம் கண்மாய் பணியை நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்திய அரசியலில் அனைத்து மாநிலங்களுக்கும், ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. இந்திய அரசியல் வரலாற்றில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட போராட்டம் மூலம் பெற்று தந்து நமக்கான உரிமையை நிலை நிறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அமித்ஷாவின் டார்கெட்டை உடைத்து நொறுக்கி எறிவார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சாணக்கியரைவிட மிகப்பெரிய ராஜதந்திரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு முன்பு அனைத்தும் அடிபட்டு போகும். அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்தோம் என்று கூறுகிறாரே. எங்களிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றீர்கள். உங்களுடைய 10 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலையில் எங்களுடைய வருவாய் எந்த அளவிற்கு பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் நிதி கொடுத்திருக்கிறீர்களா. தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை எங்களால் தெளிவாக சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது: அமைச்சர் ரகுபதி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: