பெரம்பூர், வியாசர்பாடி கோயிலில் ரூ.72 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு

பெரம்பூர்: சென்னை பெரம்பூரில் உள்ள அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் இன்று காலை ரூ.72 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவிருக்கும் மண்டபப் பணிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர மேயர் பிரியாவின் வார்டு மேம்பாட்டு நிதிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் ஓட்டேரி, ஏகாங்கிபுரம் முதல் தெருவில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி மற்றும் பெரம்பூர், ராஜீவ்காந்தி நகரில் ரூ.28.29 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா தெற்கு பகுதியில் ரூ.5.75 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜே.பிரவீன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் அருள்மிகு கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் ரூ.3.89 கோடி மதிப்பில் யோகா தியான மண்டபம், நூலகம் மற்றும் அன்னதான கூட கட்டுமானப் பணிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இக்கோயில், வடபழனியில் அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலின் உபகோவிலாக செயல்பட்டு வருகிறது.

வியாசர்பாடியில் 185 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் மேலும் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசிடம் அங்கீகாரம் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும், மடாலயத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இதில் 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு, அறநிலையத்துறை இணை ஆணையர் முல்லை, துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பூர், வியாசர்பாடி கோயிலில் ரூ.72 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: