நெல்லை : சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களும், அதற்கான கட்டுமானங்களும் தாமிரபரணி ஆற்றில் ஒன்றரை ஆண்டுகளாக உடைந்து கிடப்பதால், ஆற்றில் குளிக்க செல்வோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.கடந்த 2023 டிசம்பர் 17ம்தேதி குமரி கடலில் நிலை கொண்ட காற்று சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வரலாறு காணாத மழையை எதிர்கொண்டன.
அந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் இவ்விரு மாவட்ட மக்களின் சகஜ வாழ்க்கையை சீர்குலைத்தது. குடியிருப்புகள் மட்டுமின்றி, வயல்கள், வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன. குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தண்டவாளங்கள் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டன.
இந்த மழை வெள்ளத்தில் சீவலப்பேரி சுற்றுவட்டாரங்களும் அதிகளவு பாதிக்கப்பட்டன. சீவலப்பேரி பாலம் தண்ணீரில் மிதந்த நிலையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த கூட்டு குடிநீர் திட்ட குழாய்களும் அடித்து செல்லப்பட்டன. சீவலப்பேரியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை பொறுத்தவரையில் கோவில்பட்டி, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
சீவலப்பேரி பகுதியில் உள்ள தரைப்பாலங்களில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.இந்நிலையில் ஒன்றரை ஆண்டு காலம் ஆன நிலையில், இதுவரை அங்கு உடைந்து கிடக்கும் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படவில்லை.
குழாய்களுக்கான கட்டுமானங்களும் ஆற்றுக்குள் உடைந்து அப்படியே தொங்குகின்றன. எனவே ஆற்றுக்குள் கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்றி, குடிநீர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
The post சீவலப்பேரியில் 2023 கனமழை வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றில் உடைந்து கிடக்கும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் appeared first on Dinakaran.