தவெகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை: எடப்பாடி பழனிசாமி தகவல்

 

சென்னை: நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுசெயலாளர் டிடிவி.தினகரன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஷேக் தாவூத், நடிகர் மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சி காலம் சிறுபான்மை மக்களுக்கு பொற்காலமாக இருந்தது என வரலாறு சொல்லும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மகத்தான வெற்றியை வழங்க மக்கள் தயாராக உள்ளனர்.

எந்த சூழலிலும் அதிமுக தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகாது. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் இயக்கம் அதிமுக. தனக்கென வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களை பெற்ற இயக்கம் அதிமுக. மதம், சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் காக்கும் இயக்கம் அதிமுக. இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பின்னர் நேன்பு திறப்பு நிகழ்ச்சி முடிந்து நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: என்.டி.ஏ கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. தற்போது வரை தொகுதி பங்கீட்டில் எவ்வித தொய்வுமில்லை. வரும் 30ம் தேதி தான் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. கால அவகாசம் நிறைய இருக்கிறது. அதனால் கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து உணர்வுபூர்வமாக, நாங்கள் நிறுத்தக்கூடிய அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறக்கூடிய நிலையில் தொகுதி பங்கீடு அமையும்.

இதுவரை அதிமுகவோ அல்லது எங்கள் கூட்டணி சார்ந்த தலைவர்களோ தவெக தலைவர் விஜய்யுடனோ அல்லது அவர்களது நிர்வாகிகளிடமோ பேசவில்லை. எங்கள் இயக்கத்தில் கூட்டணிக்காக அணுகுகின்றவர்கள், எங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் வந்தால் நிச்சயமாக அவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்க நாங்கள் முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: