சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் புகைப்படம் அரசின் சாதனையை விளக்கும் படங்கள் அகற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றன.
வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளின் படி அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் தளங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், விளம்பர பலகைகள் மற்றும் அரசியல் சார்ந்த சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. செயலக வளாகத்திற்குள் இருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அதிகாரிகளின் மேற்பார்வையில் அகற்றப்பட்டன. குறிப்பாக அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பர பலகைகள் மற்றும் அரசியல் தலைவர்களின் படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரங்களில் அரசு புதிய திட்டங்களை அறிவிப்பது, அரசியல் ஆதாயம் பெறக்கூடிய விளம்பரங்களை வெளியிடுவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
