சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை தகுதியில்லை என்று கூறி வேலை வழங்க மறுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வாரியத்தால் அறிவிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்று போட்டித் தேர்விலும் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்க வேண்டிய தருணத்தில் தகுதி இல்லை என்று கூறி அவர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பது கண்டிக்கத்தக்கது.
இந்நிலையை மாற்றி பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட 6 பேருக்கும் உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களிலும் பகுதி நேரமாக படித்துப் பெறப்பட்ட முனைவர் பட்டத்தை வழக்கமான முனைவர் பட்டமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
