சென்னை: நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது 400 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பொள்ளாச்சி, தேவகோட்டை தம்பதிகள், கோவை பெண் உள்பட தமிழகத்ைத சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (55).எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார்.
இவரது மனைவி மீனா (48). ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமார்-மீனா தம்பதி, பொள்ளாச்சி சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு என்பவரது மனைவியும் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியருமான தமிழரசி (65) உள்ளிட்டோர் கடந்த 7ம் தேதி சென்னையில் இருந்து ரயில் மூலம் 13 நாட்கள் ஆன்மிக சுற்றுலாவாக அலகாபாத், அயோத்தி, முக்தினாத், கோத்ரா ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆன்மிக தரிசனம் சென்றனர்.
பின்னர் நேற்று முன்தினம் நேபாளத்தில் உள்ள மானேகாம்னாவில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு சுற்றுலா வேனில் திரும்பி கொண்டிருந்தனர். வேனில் மொத்தம் 16 பேர் பயணம் செய்துள்ளனர். காந்தர் என்ற மலைப்பகுதியில் வேன் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 400 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
வேனில் பயணம் செய்த பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார்- மீனா தம்பதி, தமிழரசி மற்றும் கோவையை சேர்ந்த ஒருவரும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த, தற்போது காரைக்குடி கழனிவாசல் பகுதியில் வசித்த அண்ணாமலை (59), அவரது மனைவி விஜயாள் (57), தேவகோட்டையைச் சேர்ந்த மீனாட்சி (61), சம்பந்தர் தெருவைச் சேர்ந்த சிவகாமி (58) ஆகிய 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தேவகோட்டை ராம வீதியைச் சேர்ந்த வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற வெங்கடாசலம் (62), அவரது மனைவி உமையாள் ஆச்சி (60) உள்பட 9 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் பொள்ளாச்சி, தேவகோட்டை தம்பதிகள் உள்பட 7 பேர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
* 7 பேர் உடல்களை சென்னை கொண்டுவர நடவடிக்கை: தமிழக அரசு தகவல்
நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற 7 தமிழர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இத்தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு அரசின், அயலகத் தமிழர் நலத்துறை, நேபாள நாட்டிலுள்ள தமிழ்ச்சங்க பிரதிநிதிகள், டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் ஒன்றிய அரசின் வெளியுறவு துறையுடன் ஒருங்கிணைந்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இறந்தவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டு வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இறந்த 7 நபர்களின் உடல்களும் பிரேத பரிசோதைனைக்கு உட்படுத்தப்பட்டு காத்மாண்டு கொண்டு செல்லப்படுகிறது. அவர்களின் உடல்கள் அங்கிருந்து விரைவில் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது. பூத உடல்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அமரர் ஊர்தி வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயம் அடைந்த நபர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவும், அவர்களை விரைந்து தாயகம் அழைத்து வரவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
