குளறுபடிகளால் கடந்த மாதம் 8ம் தேதி ரத்தான குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதன்மை தேர்வு: 47 தேர்வு மையங்களில் நடந்தது

 

சென்னை: குளறுபடிகளால் கடந்த மாதம் 8ம் தேதி ரத்தான குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதன்மை தேர்வு நேற்று நடந்தது. டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-2, குரூப் 2ஏ-வில் 828 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி வெளியிட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்தது.

குரூப்-2, 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு(மெயின் தேர்வு) கடந்த மாதம் 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு தமிழ்த்தகுதி தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. தேர்வு நடைபெறவிருந்த நிலையில் தேர்வர்களுக்கான அறை ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை என்று பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த 8ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்தது. தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 47 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. காலையில் நடைபெற்ற தேர்வை 9,223 பேரும், பிற்பகலில் நடைபெற்ற தேர்வை 9244 தேர்வர்களும் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சென்னையை பொறுத்தவரை நந்தனம் அரசு கலைக்கல்லூரி, திருவல்லிக்கேணி மாநில கல்லூரி, அரும்பாக்கம் டிஜி வைஸ்ணவா கல்லூரிகளில் தேர்வு நடந்தது. இந்த கல்லூரிகளில் மொத்தம் 7 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த முறையை போன்று ஹால்டிக்கெட் குளறுபடி இந்த முறையும் வராதபடி, தீவிரமாக கவனித்து அதற்கேற்றாற்போல் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். தேர்வு எழுத மாணவர்கள் காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் அங்கு இறுதிக்கட்ட படிப்பில் ஈடுபட்டனர். தேர்வு கூடங்களுக்கு செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள், புத்தகங்கள் கொண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு கூடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு நடைபெற்ற மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: