ஒன்றிய அரசால் தொழிலாளர்களுக்கு எந்த பிரச்னையும் வராமல் முதல்வர் பாதுகாப்பார்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில்

சட்டப்பேரவையில் நேற்று குறு-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் நாகைமாலி (மார்க்சிய கம்யூ.) பேசியதாவது: தொழிற்சங்கத்தை ஏற்க மறுத்து சங்க முன்னணி ஊழியர்கள் மீது பணிநீக்கம், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம், சம்பள பிடித்தம் போன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர் சங்கத்துடன் நிர்வாகம் எந்தவித பேச்சுவார்த்தையும் மேற்கொள்வதில்லை. மாறாக, நிர்வாகமே போட்டி சங்கத்தை உருவாக்குகிறது.

* அமைச்சர் சி.வி.கணேசன்: சாம்சங் நிறுவனத்தில் நடந்த போராட்டத்தின்போது, முதல்வரின் உத்தரவை ஏற்று சுமூகமான தீர்வை ஏற்படுத்தி கொடுத்தோம். அதுமட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்தில் சிஐடியு சங்கத்தை பதிவு செய்து கொடுத்திருக்கிறோம். ஒன்றிய பாஜ அரசு, 29 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக சுருங்கியுள்ளது. அதன்படி, 500க்கும் கீழ் தொழிலாளர் பணிபுரியும் பேக்டரி அல்லது கட்டுமான பணிகளில் பாதுகாப்பு அதிகாரி தேவையில்லை.

250க்கும் கீழ் தொழிலாளர் இருந்தால் சேம நல அதிகாரி தேவையில்லை. 100க்கும் கீழ் தொழிலாளர் இருந்தால் கேண்டீன் தேவையில்லை. 50க்கும் கீழ் பெண் தொழிலாளர் இருந்தால் குழந்தைகள் காப்பகம் தேவையில்லை என்பது குறித்தும் நாகைமாலி பேசியுள்ளார். ஒன்றிய அரசின் சட்டங்களால் தமிழ்நாட்டில் எந்த பிரச்சனையும் வராமல் தொழிலாளர்களை முதல்வர் பாதுகாத்துக் கொள்வார். நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

 

The post ஒன்றிய அரசால் தொழிலாளர்களுக்கு எந்த பிரச்னையும் வராமல் முதல்வர் பாதுகாப்பார்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: