திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி நடத்த தடை விதிக்க மறுப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு திருவிழாவில் கந்தூரி நடத்த தடை விதிக்க கோரிய வழக்கில், தடை விதிக்க ஐகோர்ட் கிளை மறுத்து உள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணிக்கமூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா வரும் ஜன.6ம் தேதி வரை நடைபெறுகிறது. தர்கா தரப்பில் அச்சிடப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்களில் கந்தூரி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஐகோர்ட் கிளையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட கூடாது என்றும், அதற்கான தீர்வை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தர்கா தரப்பில் இதுவரை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக தெரியவில்லை. இந்நிலையில் இந்த வருடம் கந்தூரி நடைபெறும் என்றும் அதற்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வௌியாகியுள்ளன. ஏற்கனவே மூன்று நீதிபதிகள் அமர்வு, கந்தூரி நடத்த தடை விதித்துள்ள நிலையில் தர்கா கமிட்டி கந்தூரி நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, தர்கா தரப்பில் யார் ஆஜராகி உள்ளனர் எனக் கேட்டார். தர்கா தரப்பில் யாரும் ஆஜராகாததால், இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. எனவே, மனுவிற்கு தர்கா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜன.2க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: